
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் தற்சமயம் நடைபெற்று வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.இதனையடுத்து இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று (ஜனவரி 25) சென்னையில் உள்ள எம்ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் முதலில் பந்துவீசுவதாக அறிவித்து இங்கிலாந்து அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். இப்போட்டிக்கான இந்திய அணியில் காயம் காரணமாக நிதீஷ் ரெட்டி மற்றும் ரிங்கு சிங் ஆகியோர் பிளேயிங் லெவனில் இருந்து நீக்கப்பட்டு வாஷிங்டன் சுந்தர் மற்றும் துருவ் ஜுரெல் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். அதேசமயம் இங்கிலாந்து அணியில் ஜேக்கப் பெத்தெல் மற்றும் கஸ் அட்கின்சன் ஆகியோருக்கு பதிலாக ஜேமி ஸ்மித், பிரைடன் கார்ஸ் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
இதனையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு பில் சால்ட் மற்றும் பென் டக்கெட் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பில் சால்ட் 4 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 3 ரன்களில் பென் டக்கெட்டும் விக்கெட்டை இழந்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த கேப்டன் ஜோஸ் பட்லர் மற்றும் ஹாரி புரூக் இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தினர். இதில் அதிரடியாக விளையாட முயன்ற ஹாரி ப்ரூக் 13 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஜோஸ் பட்லர் 2 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 45 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.