ENG vs IND, 2nd Test: இந்திய பந்துவீச்சில் தடுமாறும் இங்கிலாந்து!
இங்கிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற இன்னும் 6 விக்கெட்டுகளே தேவை.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 364 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. அதன்பின் முதல் இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து அணி 391 ரன்கள் குவித்தது.
27 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்தியா 2ஆவது இன்னிங்சை தொடங்கியது. கே.எல். ராகுல் (5), ரோகித் சர்மா (21), விராட் கோலி (20) ஆகியோர் விரைவாக ஆட்டமிழக்க இந்தியா 55 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது.
Trending
ஆனால் 4-வது விக்கெட்டுக்கு புஜாரா உடன் ரஹானே ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டது. ரஹானே 61 ரன்களும், புஜாரா 45 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இந்த ஜோடி 4ஆவது விக்கெட்டுக்கு 100 ரன்கள் சேர்த்தது.
நேற்றைய 4ஆவது நாள் ஆட்டத்தில் இந்திய அணி 2ஆவது இன்னிங்சில் 6 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்திருந்தது. ரிஷாப் பண்ட் 14 ரன்னுடனும், இஷாந்த சர்மா 4 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
அதன்பின் இன்று தொடங்கிய 5ஆவது மற்றும் கடைசி நாள் ஆட்டத்தின் போது ரிஷாப் பந்த் 22 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அடைந்தார். இஷாந்த் சர்மா 16 ரன்னில் வெளியேறினார். ஆனால், 9ஆவது விக்கெட்டுக்கு முகமது ஷமியுடன் பும்ரா ஜோடி சேர்ந்தார். இருவரும் இங்கிலாந்தின் பந்து வீச்சை மிகவும் சிறப்பான எதிர்கொண்டு ரன்கள் குவித்தனர்.
இதில் முகமது ஷமி 57 பந்தில் 5 பவுண்டரி, ஒரு சிக்சருடன் அரைசதம் அடித்து அசத்தினார். இதனால் உணவு இடைவேளைக்கு பின் இந்தியா 298 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 2ஆவது இன்னிங்சை டிக்ளேர் செய்தது. இதனால் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 272 ரன்கள் இலக்காகவும் நிர்ணயித்தது.
இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணி ஆரம்பத்திலேயே ரோரி பர்ன்ஸ், டோமினிக் சிப்லி, ஹசீப் ஹமீத், ஜானி பேர்ஸ்டோவ் ஆகியோரது விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இதனால் ஐந்தாம் நாள் தேநீர் இடைவேளையின் போது இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 67 ரன்களைச் சேர்த்திருந்தது. அந்த அணியில் ஜோ ரூட் 33 ரன்களுடனும், ஜோஸ் பட்லர் ரன் ஏதுமின்றியும் களத்தில் இருந்தனர்.
இந்திய அணி தரப்பில் இஷாந்த் சர்மா 2 விக்கெட்டுகளையும், ஷமி, பும்ரா தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
Win Big, Make Your Cricket Tales Now