
இந்திய கிரிக்கெட் அணியை பொறுத்தவரை ஒரு வீரருக்கு 30 வயதுக்கு மேல் ஆகிவிட்டால், அவருக்கு அவ்வளவாக அணியில் இடம் கிடைப்பதில்லை என குற்றச்சாட்டு கடந்த சில ஆண்டுகளாக முன்வைக்கப்படுகிறது. உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், வயதை காரணம் காட்டி தேர்வு குழு புறக்கணிப்பதாக வீரர்கள் சிலர் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இந்திய அணியில் விளையாடிய வருண் ஆரோன் இந்திய கிரிக்கெட் தேர்வு குழுவை விமர்சனம் செய்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், ‘உலகிலேயே இந்திய அணி மட்டும் தான் 30 வயதுக்கு மேல் ஆன வீரர்களால் சிறப்பாக விளையாட முடியாது என்று நினைக்கிறது. மற்ற எந்த நாட்டிலும் இதுபோல் இல்லை. ஆஸ்திரேலிய அணி வீரர் மைக் ஹசி 30 வயதுக்கு மேல் ஆகிவிட்ட போதிலும், அந்நாட்டு அணியில் இடம்பெற்று விளையாடினார். அதேபோல் 38 வயது நிரம்பிய இங்கிலாந்து வீரரான ஜேம்ஸ் ஆண்டர்சன் இன்னமும் அந்த அணிக்காக விளையாடி வருகிறார். ஆனால் இதைப் பற்றியெல்லாம் அங்கு யாரும் கேள்விகளை எழுப்ப வில்லை. நன்றாக பயிற்சி பெற்ற ஒரு வீரரால் 30 வயதுக்கு மேல் சிறப்பாக விளையாட முடியாது என்று யாராலும் கூற முடியாது.