
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் 13ஆவது பதிப்பானது இந்தியா மற்றும் இலங்கையில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 13ஆவது லீக் ஆட்டத்தில் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணியை எதிர்த்து, அலிசா ஹீலி தலைமையிலான ஆஸ்திரேலிய மகளிர் அணி பலப்பரீட்சை நடத்தின. விசாகப்பட்டினத்தில் உள்ள ஏசிஏ கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய மகளிர் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி களமிறங்கிய இந்திய மகளிர் அணிக்கு பிரதிகா ராவல் மற்றும் ஸ்மிருதி மந்தனா இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். தொடர்ந்து அபாரமாக விளையாடிய இருவரும் தங்களுடைய அரைசதங்களைப் பதிவு செய்து அசத்தியதுடன், முதல் விக்கெட்டிற்கு 155 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினார். அதன்பின், இந்த ஆட்டத்தில் இருவரும் சதமடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஸ்மிருதி மந்தனா 9 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் என 80 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார்.
அவரைத்தொடர்ந்து மற்றொரு தொடக்க வீராங்கனையான பிரதிகா ராவலும் 10 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 75 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் களமிறங்கிய வீராங்கனைகளில் ஹர்லீன் தியோல் 38 ரன்களையும், கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 22 ரன்னிலும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 33 ரன்களையும் சேர்த்து விக்கெட்டை இழந்தனர். அதன்பின் வந்த ரிச்சா கோஷ் அதிரடியாக விளையாடி 3 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் என 32 ரன்களையும், அமஞ்சோத் கவுர் 16 ரன்களையும் சேர்த்த நிலையில் மற்ற வீராங்கனைகள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.