
Manchester Test: இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் காயம் காரணமாக களத்தில் இருந்து வெளியேறிய இந்திய வீரர் ரிஷப் பந்த், இன்று தனது காயத்தையும் பொறுட்படுத்தாமல் களமிறங்கியுள்ளார்.
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பை டெஸ்ட் தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கேஎல் ராகுல் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 94 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில் கேஎல் ராகுல் 46 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார்.
மறுபக்கம் அரைசதம் கடந்து அசத்திய யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் 10 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 58 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் ஷுப்மன் கில்லும் 12 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ரிஷப் பந்த் காயம் காரணமாக களத்தில் இருந்து பாதியிலேயே வெளியேறிய நிலையில், அரைசதம் கடந்திருந்த சாய் சுதர்ஷனும் 61 ரன்களில் நடையைக் கட்டினார். இதன் காரணமாக முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 264 ரன்களைச் சேர்த்திருந்தது.