
பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வந்த ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்றிருந்த இத்தொடரில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறினர்.
இந்நிலையில் இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இவ்விரு அணிகளும் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் மிட்செல் சான்ட்னர் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு வில் யங் மற்றும் ரச்சின் ரவீந்திரா இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் இணைந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் முதல் விக்கெட்டிற்கு 57 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், வில் யங் 15 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அவரைத்தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ரச்சின் ரவீந்திரா 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 37 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் குல்தீப் யாதவின் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அவரைத்தொடர்ந்து அணியின் அனுபவ வீரர் கேன் வில்லியம்சனும் குல்தீப் யாதவின் இரண்டாவது ஓவரிலேயெ ஆட்டமிழந்து நடையைக் கட்டினார். இதனால் அந்த அணி 75 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் இணைந்த டேரில் மிட்செல் - டாம் லேதம் இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர்.