
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 தொடரின் முதல் ஆட்டத்தில் இந்திய அணி இன்று மோதுகிறது. இந்தத் தொடரானது அடுத்த மாதம் நடைபெற உள்ள டி 20 உலகக் கோப்பைக்கு சிறந்த பயிற்சியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளையில் தற்போதைய தொடரின் வாயிலாக நடுவரிசை பேட்டிங் மற்றும் 6-வது பந்து வீச்சாளர் பிரச்சினைக்கு இந்திய அணி தீர்வு காணவேண்டிய நிலையில் உள்ளது.
சமீபத்தில் முடிவடைந்த ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி பேட்டிங்கில் சிறப்பாகவே செயல்பட்ட போதிலும் அதிக மாற்றங்களை செய்தது. பந்து வீச்சில் உள்ள குறைகள் இந்தத் தொடரில் வெளிப்பட்டது. தற்போது ஜஸ்பிரீத் பும்ரா, ஹர்ஷால் படேல் ஆகியோர் அணிக்கு திரும்பி இருப்பதால் பந்து வீச்சுத்துறை வலுப்பெறக்கூடும்.
ஆசிய கோப்பையில் சூப்பர் 4 சுற்றின் கடைசி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக விராட் கோலி சதம் அடித்திருந்தார். பார்முக்கு திரும்பியிருப்பதால் ஆஸ்திரேலிய தொடரில் அவரை தொடக்க வீரராக களமிறக்கி இந்திய அணி நிர்வாகம் சோதித்து பார்க்கக்கூடும். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக தினேஷ் கார்த்திக்கை பயன்படுத்துவதா? அல்லது ரிஷப் பந்த்தை பயன்படுத்துவதா? என்பதற்கு இன்னும் தீர்வு காணப்படாமல் உள்ளது.