Advertisement
Advertisement
Advertisement

இந்தியா vs ஆஸ்திரேலியா, இரண்டாவது டி20 - போட்டி முன்னோட்டம்!

இந்தியா vs ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று நாக்பூரில் நடைபெறுகிறது.

Bharathi Kannan
By Bharathi Kannan September 23, 2022 • 10:40 AM
India vs Australia, 2nd T20I - Cricket Match Prediction & Probable XI
India vs Australia, 2nd T20I - Cricket Match Prediction & Probable XI (Image Source: Google)
Advertisement

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2ஆவது டி 20 கிரிக்கெட் போட்டி நாக்பூரில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் தோல்வியடைந்தால் டி 20 தொடரை இழக்க நேரிடும் என்பதால் வெற்றிக்காக போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி.

இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 கிரிக்கெட் தொடரில் மொஹாலியில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் 208 ரன்கள் இலக்கை துரத்திய ஆஸ்திரேலிய அணி 4 பந்துகளை மீதம் வைத்து வெற்றி கண்டிருந்தது. இந்த ஆட்டத்தில் இந்திய அணியின்பந்து வீச்சு மோசமாக அமைந்தது.

Trending


அக்சர் படேலை தவிர மற்ற அனைத்து இந்திய பந்து வீச்சாளர்களும் ரன்களை வாரி வழங்கினர். அதிலும் இறுதிக்கட்ட ஓவர்களில் புவனேஷ்வர் குமார், ஹர்ஷால் படேல் ஆகியோரது பந்துகளில் எந்தவித சிரமமும் இன்றி ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் ரன்களை குவித்தனர். ஜஸ்பிரீத் பும்ரா இல்லாதது பந்து வீச்சில் உள்ள குறையை வெளிச்சம் போட்டு காட்டியது.

இங்கிலாந்து சுற்றுப்பயணத்துக்கு பிறகு ஜஸ்பிரீத் பும்ரா எந்தவித கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடவில்லை. ஆசிய கோப்பையில் பங்கேற்பதை முதுகு வலி காரணமாக தவிர்த்தார். காயத்தில் இருந்து பும்ரா குணமடைந்ததாக கூறப்பட்ட நிலையில் மொஹாலி ஆட்டத்தில் அவர், களமிறக்கப்படவில்லை. இது பும்ராவின் உடற்தகுதி மீது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

இது ஒருபுறம் இருக்க ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியாவிடம் இருந்து தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பந்து வீச்சு வெளிப்படாதது அணியின் பலவீனத்தை மேலும் அதிகரித்துள்ளது. ஹர்திக் பாண்டியா கடைசியாக பந்து வீசிய 4 ஆட்டங்களில் 14 ஓவர்களில் 126 ரன்களை வாரி கொடுத்துள்ளார். வேகப்பந்து வீச்சு நிலைமை இப்படி இருக்கும் சூழ்நிலையில் யுவேந்திர சாஹலின் சுழலும் பேட்ஸ்மேன்களுக்கு அச்சுறுத்தல் கொடுப்பதாக இல்லை.

டி 20 உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக இன்றைய ஆட்டம் உட்பட 5, டி 20 போட்டிகளில் மட்டுமே இந்திய அணி விளையாட உள்ளது. உலகக் கோப்பை தொடருக்கு ஆயத்தமாக இன்னும் சில ஆட்டங்களே உள்ள நிலையில் பந்துவீச்சு நாளுக்கு நாள் பலவீனம் அடைந்து வருவது அணியின் ஸ்திரத்தன்மையை பாதிப்பதாக உள்ளது. இதற்கு இன்றைய ஆட்டத்தில் தீர்வு காண இந்திய அணி முயற்சி செய்யக்கூடும்.

இதுபோன்று பீல்டிங்கிலும் இந்திய அணி முன்னேற்றம் காண வேண்டும். முதல் ஆட்டத்தில் முக்கிய தருணங்களில் 3 கேட்ச்களை இந்திய வீரர்கள் தவறவிட்டனர். இது பெரிய அளவில் பாதகமாக அமைந்தது. பேட்டிங்கை பொறுத்தவரையில் கே.எல்.ராகுல் பார்முக்கு திரும்பியிருப்பது பலம் சேர்க்கிறது. ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ் ஆகியோரிடம் இருந்து மேலும் இரு சிறந்த இன்னிங்ஸ் வெளிப்படக்கூடும். டாப் ஆர்டரில் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோரும் மட்டையை சுழற்றினால் பேட்டிங் கூடுதல் வலுப்பெறும்.

ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரையில் டேவிட் வார்னர், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டாயினிஸ், மிட்செல் மார்ஷ் ஆகியோர் இல்லாத நிலையிலும் அற்புதமாக விளையாடி அசத்தியது. ஆல்ரவுண்டரான கேமரூன் கிரீன் தனது 2-வது டி 20 ஆட்டத்திலேயே அணியின் நம்பிக்கையை பெற்றுள்ளார். ஸ்டீவ் ஸ்மித், டிம் டேவிட் ஆகியோரும் சிறந்த பங்களிப்பை வழங்குபவர்களாக உள்ளனர். 

அனுபவம் வாய்ந்த மேத்யூ வேட், போட்டியை சிறப்பாக முடித்து வைக்கும் திறனை மேம்படுத்திக் கொண்டுள்ளது அணிக்கு பலத்தை சேர்த்துள்ளது. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றுவதில் ஆஸ்திரேலிய அணி முனைப்பு காட்டக்கூடும்.

அதேவேளையில் பலவீனமான பந்து வீச்சுடன் தொடரை இழக்காமல் இருக்க இந்திய அணி வெற்றிக்காக போராடக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. போட்டி நடைபெறும் விசிஏ மைதானம், மொஹாலி ஆடுகளத்தில் இருந்து வேறுபட்டது. இங்கு பந்துகள் அந்த அளவுக்கு எகிறி வராது. இதனால் பந்து வீச்சாளர்களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். பனிப்பொழிவு பிரச்சினை இருக்கக்கூடும் என்பதால் டாஸ் வெல்லும் அணி பீல்டிங்கை தேர்வு செய்ய அதிக முக்கியத்துவம் கொடுக்கக்கூடும்.

அதேசமயம் இன்றைய ஆட்டம் நடைபெறும் நாக்பூரில் நேற்று முன்தினம் கனமழை பெய்தது. நேற்று காலையிலும் மழை பெய்ததால் இரு அணி வீரர்களின் பயிற்சி ரத்து செய்யப்பட்டது. இந்த போட்டியை காண சுமார் 45 ஆயிரம் டிக்கெட்கள் விற்று தீர்ந்துள்ளது. இன்றும் மழை எச்சரிக்கை உள்ளதால் போட்டி திட்டமிட்டபடி நடைபெறுமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.

உத்தேச அணி

இந்தியா - கேஎல் ராகுல், ரோஹித் சர்மா (கே), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், அக்சர் படேல், ரவிச்சந்திரன் அஸிவ்ன், ஹர்ஷல் படேல், புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா.

ஆஸ்திரேலியா - ஆரோன் பிஞ்ச்(கே), கேமரூன் கிரீன், ஸ்டீவன் ஸ்மித், கிளென் மேக்ஸ்வெல், ஜோஷ் இங்கிலிஸ், டிம் டேவிட், மேத்யூ வேட், பாட் கம்மின்ஸ், நாதன் எல்லிஸ், ஆடம் ஸாம்பா, ஜோஷ் ஹேசில்வுட்


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement