
ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் டி20 உலகக் கோப்பை 2022 தொடரின் அரையிறுதி சுற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி, பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறிவிட்டது. நாளை நடைபெறவுள்ள இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதவுள்ளன. இப்போட்டியில் வெற்றிபெறும் அணி, வரும் ஞாயிறு அன்று இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை எதிர்த்து களமிறங்கும்.
இந்திய அணியின் பேட்டிங், பந்துவீச்சு இரண்டும் சிறப்பாக இருக்கிறது. குறிப்பாக, மிடில் வரிசை உலகத்தரத்தில் இருப்பதுதான் அணிக்கு பலமாக பார்க்கப்படுகிறது. புவனேஷ்வர் குமார் டி20 கிரிக்கெட்டில் இங்கிலாந்து கேப்டன் ஜாஸ் பட்லருக்கு எதிராக 30 பந்துகளை வீசி 5 விக்கெட்களை எடுத்திருக்கிறார். இதனால், பவர் பிளேவில் இங்கிலாந்து நெருக்கடியுடன்தான் விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடக்க வீரர் இப்படி மோசமான ரெக்கார்ட் வைத்திருப்பதுபோல், இங்கிலாந்து அணியின் மிடில் வரிசையில் இந்த தொடரில் படுமோசமான ரெக்கார்ட்டை வைத்திருக்கிறது. ஆம், இங்கிலாந்து அணி மிடில் வரிசை பேட்டர்களில் ஒருவர் கூட இத்தொடரில் 60 ரன்களை கூட அடிக்கவில்லை. அதேவேளையில், இந்திய அணி மிடில் வரிசை பேட்டர்கள் 6 முறை 50 ரன்களை அடித்திருக்கிறார்கள்.