
நியூஸிலாந்து அணி 3 டி 20, 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. இரு அணிகள் இடையிலான முதல் டி 20 போட்டி ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் இன்று இரவு நடைபெறுகிறது.
டி 20 உலகக் கோப்பை இறுதி போட்டி முடிவடைந்த இரு நாட்களில் நியூஸிலாந்து அணி, இந்திய தொடரை அணுகுவதால் கேப்டன் வில்லியம்சன் டி 20 தொடரில் கலந்து கொள்ளமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் டிம் சவுதி இன்றைய ஆட்டத்தில் அணியை வழிநடத்த உள்ளார்.
அதேவேளையில் இந்தத் தொடரில் இந்தியா டி 20 அணியின் புதிய கேப்டனான ரோஹித் சர்மா தலைமையில் களமிறங்குகிறது. மேலும் பயிற்சியாளராக ராகுல் திராவிட்டுக்கு இது முதல் தொடர் என்பதால் இந்த கூட்டணி மீது எதிர்பார்ப்பு உள்ளது. ஏனெனில் இந்த கூட்டணியே 2022ஆம் ஆண்டுஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள டி 20 உலகக் கோப்பைக்கான அணியை கட்டமைக்க உள்ளது.