
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் மற்றும் 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலில் நடந்த ஒருநாள் போட்டி தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி 3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக கைப்பற்றி அசத்தியது.
இந்த நிலையில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரின் முதலாவது கிரிக்கெட் போட்டி ஜார்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் இன்று நடக்கிறது. டி20 தொடரில் இந்திய அணி ஹர்திக் பாண்ட்யா தலைமையில் களம் இறங்குகிறது. துணைகேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். டி20 போட்டி அணியின் வருங்கால கேப்டனான உருவெடுக்க வசதியாக ஹர்திக் பாண்டியாவுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அவரது தலைமையில் சமீபத்தில் நடந்த இலங்கைக்கு எதிரான டி20 தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் வென்றது நினைவுகூரத்தக்கது.
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் விளையாடிய கேப்டன் ரோஹித் சர்மா, முன்னாள் கேப்டன் விராட்கோலி, வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது ஷமி, முகமது சிராஜ் ஆகியோருக்கு பணிச்சுமை காரணமாக இந்த தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அணியில் இளம் வீரர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு இருக்கிறது.