
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஹைதராபாத்தில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி நியூசிலாந்தை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று ராய்ப்பூரில் நடைபெறுகிறெது. மொத்தம் 3 ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடரில், முதல் ஆட்டத்தில் வென்றிருக்கும் இந்தியா, இந்த ஆட்டத்திலும் நியூஸிலாந்தை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் இருக்கிறது. மறுபுறம் நியூலிலாந்து அணி தொடரை தக்கவைக்க இந்த ஆட்டத்தில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.
இந்தியாவைப் பொருத்தவரை முதல் ஆட்டத்தில் இந்திய பேட்டிங் வரிசை முற்றிலுமாகச் சரிந்த நிலையில், ஷுப்மன் கில்லின் அதிரடி இரட்டைச் சதமே அணியின் பலமாக அமைந்தது. இந்த ஆட்டத்திலும் அவா் அதே உத்வேகத்துடன் களம் காணுவாா் என எதிா்பாா்க்கலாம். கோலி உள்ளிட்ட இதர பேட்டா்கள் கடந்த ஆட்டத்தில் சோ்க்கத் தவறிய ரன்களை இதில் சோ்க்க முயற்சிக்கலாம்.