
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றி நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்து அசத்தியது.
இரு அணிகள் இதையடுத்து 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 கிரிக்கெட் தொடரில் ராஞ்சியில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்தது. சுழலுக்கு சாதகமாக மாறிய ராஞ்சி ஆடுகளத்தில் 177 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய அணியால் 155 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சில் உள்ள பலவீனங்கள் வெளிப்பட்டன. உம்ரன் மாலிக் ஒரே ஓவரில் 16 ரன்களை வழங்கிய நிலையில் அர்ஷ்தீப் சிங் ஆட்டத்தின் கடைசி ஓவரில் 27 ரன்களை தாரைவார்த்தார். இதுவே பேட்டிங்கில் இந்திய அணிக்கு அதிக அழுத்தத்தை உருவாக்கியது. இதனால் இன்றைய ஆட்டத்தில் பந்து வீச்சில் சில மாற்றங்கள் இருக்க வாய்ப்பு உள்ளது.