
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இந்த தொடரில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ள இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் மெல்போர்னில் இன்று (அக்.23) நடைபெறுகிறது. இரு அணிகளுக்கும் இதுதான் இந்தத் தொடரின் முதல் போட்டி. இரு அணிகளும் உலகக் கோப்பை, ஆசியக் கோப்பை போட்டிகளில் மட்டுமே நேருக்கு நேர் விளையாடி வருகின்றன.
அதன் காரணமாக கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் இந்த இரு அணிகளுக்கும் இடையிலான போட்டிக்கு எப்போதுமே உச்சக்கட்ட எதிர்பார்ப்பு நிலவும். கடந்த ஆண்டு நடந்த டி20 உலகக் கோப்பை தொடர், சமீபத்தில் நடந்த ஆசிய கோப்பை தொடர் ஆகியவற்றில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி பாகிஸ்தானிடம் அடைந்த தோல்விக்கு பழிதீர்க்கும் முனைப்புடன் களமிறங்குகிறது.
நடப்பு உலகக்கோப்பை தொடருக்கு முன்பாக பலம் வாய்ந்த ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு எதிராக விளையாடிய தொடர்களை கைப்பற்றிய உத்வேகத்துடன் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது இந்திய அணி. பேட்டிங்கில் கேப்டன் ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், விராட்கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக் என்று அதிரடி பேட்ஸ்மேன்களுக்கு பஞ்சமில்லை.