அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் - ரிங்கு சிங்!
நான் அந்த ஷாட்டை சிக்ஸராக அடித்த போது அது கண்ணாடியை உடைக்கும் என்பது எனக்கு தெரியாது என ரிங்கு சிங் தெரிவித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்ட நிலையில் 2ஆவது போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. போர்ட் எலிசபெத் நகரில் நேற்று நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 19.3 ஓவரில் 180/7 ரன்கள் எடுத்தது.
அதிகபட்சமாக கேப்டன் சூர்யகுமார் யாதவ் 56 ரிங்கு சிங் 68 ரன்கள் எடுக்க தென்னாப்பிரிக்கா சார்பில் அதிகபட்சமாக ஜெரால்ட் கோட்ஸி 3 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத்தொடர்ந்து மழை தாமதத்தால் 15 ஓவரில் 152 ரன்கள் என்ற புதிய இலக்கை துரத்திய தென் ஆப்பிரிக்காவுக்கு ஹென்றிக்ஸ் 49, ஐடன் மார்க்ரம் 30 ரன்கள் எடுத்து 13.5 ஓவரிலேயே எளிதாக வெற்றி பெற வைத்தனர்.
Trending
இதனால் முகேஷ் குமார் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியை சந்தித்த இந்தியா இத்தொடரை சமன் செய்ய கடைசி போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
இந்த போட்டியில் ஆரம்பத்திலேயே விக்கெட்களை இழந்து தடுமாறிய இந்தியாவுக்கு இளம் வீரர் ரிங்கு மீண்டும் மிகச் சிறப்பாக விளையாடி 9 பவுண்டரி 2 சிக்சருடன் டி20 கிரிக்கெட்டில் தன்னுடைய முதல் அரை சதமடித்து 68 ரன்கள் குவித்து அசத்தினார். குறிப்பாக ஆரம்பத்தில் நிதானமாக விளையாடிய அவர் கடைசி நேரத்தில் அதிரடியாக எதிர்கொண்டு வேகமாக ரன்களை சேர்த்தார்.
இதில் தென் ஆபிரிக்க கேப்டன் ஐடன் மார்க்கம் வீசிய 19ஆவது ஓவரின் கடைசி பந்தில் நேராக அவர் அடித்த சிக்சர் மைதானத்தின் கண்ணாடிகளை நொறுக்கியது இந்திய ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்தது. இந்நிலையில் தம்முடைய சிக்சரால் கண்ணாடிகள் உடைந்தது தெரியாது என்று தெரிவிக்கும் ரிங்கு சிங் அதற்காக மைதான பராமரிப்பாளர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.
இதுபற்றி போட்டியின் முடிவில் பேசிய அவர், “நான் அந்த ஷாட்டை சிக்ஸராக அடித்த போது அது கண்ணாடியை உடைக்கும் என்பது எனக்கு தெரியாது. இப்போது தான் அது எனக்கு தெரிய வந்தது. அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இப்போட்டியில் ஆரம்பத்தில் 3 விக்கெட்டுகளை இழந்து இந்தியா தடுமாறிய போது நான் பேட்டிங் செய்ய சென்ற சூழ்நிலை கடினமாக இருந்தது.
அந்த சமயத்தில் சூர்யா பாய் உனக்கு வரக்கூடிய இயற்கையான ஆட்டத்தை விளையாடு என்று என்னிடம் சொன்னார். அதனால் நான் சற்று மெதுவாக விளையாடினேன். ஆனால் ஆரம்பத்தில் சில பந்துகளை எதிர்கொண்டு சூழ்நிலைகளை உணர்ந்த பின் பெரிய ஷாட்டுகளை அடிப்பதற்கான வாய்ப்புகள் எனக்கு வந்தது” என்று கூறியுள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now