இந்தியா vs இலங்கை, முதல் டி20 போட்டி - உத்தேச லெவன்!
இந்திய - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி இன்று மும்பையிலுள்ள வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்தியாவுக்கு வருகை தந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி மூன்று டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. அதன்படி இந்தியா- இலங்கை அணிகள் இடையிலான முதலாவது டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு அரங்கேறுகிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.
இந்திய அணியில் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, லோகேஷ் ராகுல் ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டயா அணியை வழிநடத்த உள்ளார். 2024ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு சரியான வீரர்களை அடையாளம் காண்பதற்கான தொடக்கமாக இந்த தொடர் அமையும்.
Trending
அத்துடன் ஹர்திக் பாண்ட்யாவை 20 ஓவர் அணிக்கான நிரந்தர கேப்டனாக நியமிப்பதற்கான அடித்தளமாகவும் இந்த தொடர் இருக்கப்போகிறது. மூத்த வீரர்களை பொறுத்தவரை அடுத்த 20 ஓவர் உலக கோப்பையில் இடம் பிடிப்பது கடினம் தான். அதனால் இனி அவர்கள் ஒதுங்கி விடுவதற்கு வாய்ப்புள்ளது.
கடந்த ஆண்டில் இந்தியா அதிகபட்சமாக மொத்தம் 40 சர்வதேச 20 ஓவர் போட்டிகளில் விளையாடியது. 31 வீரர்கள் பயன்படுத்தப்பட்டனர். இதே போல் இந்த ஆண்டிலும் பரிசோதனை முயற்சியாக இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட உள்ளது. இலங்கைக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காராக அதிரடி வீரர் இஷான் கிஷனுடன், ருதுராஜ் கெய்க்வாட் அல்லது சுப்மான் கில் இறங்குவார்கள். மிடில் வரிசையில் துணை கேப்டன் சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, சஞ்சு சாம்சன் உள்ளிட்டோர் பலம் சேர்க்கிறார்கள்.
பந்து வீச்சில் யுஸ்வேந்திர சாஹல், வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப்சிங், உம்ரான் மாலிக் நம்பிக்கை அளிக்கிறார்கள். கடந்த ஆண்டில் ஆசிய கோப்பை கிரிக்கெட்டின் சூப்பர்4 சுற்றில் இலங்கையிடம் தோல்வி அடைந்த இந்திய அணி அதற்கு பழிதீர்க்க இது சரியான தருணமாகும்.
ஆசிய சாம்பியனான இலங்கை அணி தசுன் ஷனகா தலைமையில் அடியெடுத்து வைக்கிறது. பதும் நிஷங்கா, ராஜபக்சே, தனஞ்ஜெயா டி சில்வா, குசல் மென்டிஸ், சுழற்பந்து வீச்சாளர் வானிந்து ஹசரங்கா என்று அந்த அணியில் திறமையான வீரர்கள் இருப்பதால் கடும் சவால் அளிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.
குறைவான பவுண்டரி தூரம் கொண்ட மும்பை மைதானம் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமானது. அதனால் ரசிகர்கள் ரன் விருந்தை எதிர்பார்க்கலாம். 2ஆவது பேட்டிங் செய்யும் அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் என்பதால் டாஸ் முக்கிய பங்கு வகிக்கும். இவ்விரு அணிகளும் இதுவரை சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 26 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 17இல் இந்தியாவும், 8இல் இலங்கையும் வெற்றி பெற்றன. ஒரு ஆட்டத்தில் முடிவில்லை.
உத்தேச அணி
இந்தியா – இஷான் கிஷன், ஷுப்மான் கில், சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ஹர்திக் பாண்டியா (கே), சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், ஹர்ஷல் படேல், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக்
இலங்கை – பாத்தும் நிஷங்க, குசல் மெண்டிஸ், அவிஷ்க ஃபெர்னாண்டோ, சரித் அசலங்கா, பானுக ராஜபக்ச, தசுன் ஷனக (கே), வனிந்து ஹசரங்க, சாமிக கருணாரத்ன, மஹீஷ் தீக்ஷன, லஹிரு குமார, தில்ஷன் மதுஷங்க.
Win Big, Make Your Cricket Tales Now