
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை சூப்பர் 12 சுற்றில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி 4 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி, ஒரு தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று குரூப் 2-ல் முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில் இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் இன்று ஜிம்பாப்வே அணியுடன் மெல்பர்ன் மைதானத்தில் மோதுகிறது.
அரை இறுதிக்கு முன்னேற வேண்டுமானால் இந்த ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நெருக்கடியுடன் இந்திய அணி இருந்தது. ஆனால் தற்போது தென் ஆப்பிரிக்கா அணி நெதர்லாந்துடனான போட்டியில் தோல்வியடைந்து, தொடரிலிருந்து வெளியேறியுள்ளதால் இந்திய அணி நேரடியாக அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இருப்பினும் இந்திய அணி இப்போட்டியில் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியளில் முதலிடத்தை தக்க வைக்க முனையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணியைப் பொறுத்தவரையில், தொடக்க ஆட்டத்தில் விராட் கோலி வியக்கத்தக்க வகையில் விளையாடி 53 பந்துகளில் 82 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பு செய்திருந்தார். அவரிடம் இருந்தும், சூர்யகுமார் யாதவிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த ஆட்டம் வெளிப்படக்கூடும். கேஎல்ராகுல், வங்கதேச அணிக்கு எதிராக அரை சதம் அடித்து பார்முக்கு திரும்பி இருப்பது டாப் ஆர்டர் பேட்டிங்கிற்கு வலுசேர்த்துள்ளது.