
இலங்கையில் நடைபெற்று வரும் மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்ற இத்தொடரின் அரையிறுதி சுற்றுக்கு குரூப் ஏ பிரிவில் இருந்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் மகளிர் அணிகளும், குரூப் பி பிரிவில் இருந்து இலங்கை மற்றும் வங்கதேச அணிகளும் முன்னேறின. இதில் வங்கதேசத்தை வீழ்த்தி இந்திய அணியும், பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை அணியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியது. அதன்படி இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணிக்கு வழக்கம் போல் ஷஃபாலி வர்மா - ஸ்மிருதி மந்தனா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஸ்மிருதி மந்தனா தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், மற்றொரு தொடக்க வீராங்கனை ஷஃபாலி வர்மா 16 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய உமா சேத்ரி 9 ரன்களிலும், கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 11 ரன்களுக்கும் என ஆட்டமிழந்தாலும், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்மிருதி மந்தனா தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
மேற்கொண்டு அவருக்கு துணையாக விளையாடிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 29 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அரைசதம் கடந்து விளையாடி வந்த ஸ்மிருதி மந்தனாவும் 10 பவுண்டரிகளுடன் 60 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய ரிச்சா கோஷ் அதிரடியாக விளையாடியதுடன் 14 பந்துகளில் 4 பவ்வுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட 30 ரன்களைச் சேர்த்த நிலையில் ரன் அவுட் முறையில் விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய வீராங்கனைகளும் பெரிதளவில் சோபிக்க தவறினர்.