
அயர்லாந்து மகளிர் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு ஒருநாள் போட்டிகளின் முடிவில் இந்திய அணி அடுத்தடுத்து வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன் 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி போட்டி இன்று (ஜனவரி 15) நடைபெறற்றது.
ராஜ்கோட்டில் உள்ள சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து அயர்லாந்து மகளிர் அணியை பந்துவீச அழைத்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ஸ்மிருதி மந்தனா மற்றும் பிரதிகா ராவல் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். தொடர்ந்து அபாரமாக விளையாடிய இருவரும் அடுத்தடுத்து பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் பறக்கவிட்டு அசத்தினர்.
இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி கேப்டன் ஸ்மிருதி மந்தனா சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 10ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்திய நிலையில், அவருடன் இணைந்து விளையாடிய பிரதிகா ரவாலும் சதமடித்து அசத்தினார். இதன்மூலம் இருவரது பார்ட்னர்ஷிப்பும் 230 ரன்களைத் தாண்டியது. அதன்பின் 12 பவுண்டரி, 7 சிக்ஸர்கள் என 135 ரன்களைச் சேர்த்த நிலையில் ஸ்மிருதி மந்தனா தனது விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ரிச்சா கோஷும் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்த கையோடு 59 ரன்களில் ஆட்டமிழந்தார்.