
இங்கிலாந்துக்கு எதிரான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடியது. இதில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றிருந்த நிலையில், இன்று ஐந்தாவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடைபெறுவதாக இருந்தது.
இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, பந்துவீச்சுப் பயிற்சியாளர் பரத் அருண், ஃபீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் ஆகியோர் கரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். அடுத்தக்கட்டமாக இந்திய அணியின் ஜூனியர் பிசியோதெரபிஸ்ட் யோகேஷ் பார்மருக்கு கரோனா தொற்று உறுதியானதை அடுத்து, அவர் தனிமைப்படுத்தப்பட்டார். இதனால் இந்திய அணியின் நேற்றைய பயிற்சி ரத்தானது. அனைத்து இந்திய வீரர்களுக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அனைவருக்கும் கரோனா இல்லை என்பது உறுதியானது.
எனினும் இன்று மைதானத்தில் களமிறங்க இந்திய வீரர்கள் தயக்கம் காட்டினார்கள். வரும் நாள்களில் கரோனா பாதிப்பு மேலும் அதிகமானால் என்ன செய்வது என அவர்கள் அச்சப்பட்டார்கள். இதையடுத்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திடம் பிசிசிஐ பேச்சுவார்த்தை நடத்தியது. பேச்சுவார்த்த முடிவில் 5ஆவது டெஸ்ட் ரத்துசெய்வதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. மேலும் ரத்து செய்யப்பட்ட 5ஆவது டெஸ்டை வேறொரு தருணத்தில் நடத்த விரும்புவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.