
இந்திய கிரிக்கெட் அணியின் இளம் நட்சத்திர வீரர் ரிஷப் பந்த். 24 வயதிலேயே சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா என்று சுற்றுப்பயணம் மேற்கொண்ட இடத்தில் எல்லாம் சதங்களை விளாசி அசத்தியவர். இதனால் இந்திய டெஸ்ட் அணியின் வருங்கால கேப்டன் என்ற இடத்தில் ரிஷப் பந்த் பார்க்கப்பட்டார்.
ஆனால் புத்தாண்டுக்கு முன்பாக நெடுஞ்சாலை விபத்தில் சிக்கிய ரிஷப் பந்த் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். அதன்பின் அறுவை சிகிச்சை, ஓய்வு என்று இருந்த ரிஷப் பந்த் எப்போது மீண்டும் கிரிக்கெட் களம் திரும்புவார் என்றே தெரியாமல் இருந்தது. ஒவ்வொரு முறையும் ரிஷப் பந்த் ஸ்டிக் உதவியுடன் நடந்து வந்ததால், இந்த ஆண்டில் கிரிக்கெட் திரும்ப வாய்ப்பே இல்லை என்று சொல்லப்பட்டது.
இதனிடையே யாரின் உதவியும் இல்லாமல் ரிஷப் பந்து நடந்து தனது இன்ஸ்டாகிராமில் காணொளியை பதிவிட்டார். அதுமட்டுமல்லாமல் உடனடியாக பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்கும் சென்றார். அங்கு ஏற்கனவே காயத்தில் இருந்து மீண்டு வருவதற்காக பயிற்சி மேற்கொண்டு வந்த ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், பிரசித் கிருஷ்ணா உள்ளிட்டோருடன் ரிஷப் பந்தும் இணைந்து கொண்டார்.