BANW vs IND 1st ODI: இந்தியாவை வீழ்த்தி வங்கதேசம் சாதனை வெற்றி!
இந்திய மகளிர் அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது. இதன் முதலாவது ஆட்டம் மிர்புரில் நேற்று நடந்தது. இதில் முதலில் வங்களதேசம் பேட்டிங் செய்த போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் 44 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
தொடர்ந்து விளையாடிய வங்கதேசம் 43 ஓவர்களில் 152 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக கேப்டனும், விக்கெட் கீப்பருமான நிகர் சுல்தானா 39 ரன்கள் எடுத்தார். இந்திய தரப்பில் அறிமுக வேகப்பந்து வீச்சாளர் அமன்ஜோத் கவுர் 4 விக்கெட்டும், தேவிகா வைத்யா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
Trending
அடுத்து டக்வொர்த்-லீவிஸ் விதிப்படி இந்தியாவுக்கு 44 ஓவர்களில் 154 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்திய வீராங்கனைகள் இந்த எளிய இலக்கைக் கூட நெருங்க முடியாமல் திணறினர். துணை கேப்டன் ஸ்மிர்தி மந்தனா (11 ரன்), யாஸ்திகா பாட்டியா (15 ரன்), கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (5 ரன்), ஜெமிமா ரோட்ரிக்ஸ் (10 ரன்) ஏமாற்றம் அளித்தனர்.
ஆல்-ரவுண்டர் தீப்தி ஷர்மா எடுத்த 20 ரன்களே அணியின் அதிகபட்சமாக அமைந்தது. இதனால் 35.5 ஓவர் மட்டுமே தாக்குப்பிடித்த இந்திய அணி 113 ரன்னில் சுருண்டது. இதன் மூலம் வங்கதேசம் 40 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. வேகப்பந்து வீச்சாளர் மருபா அக்தர் 4 விக்கெட்டும், சுழற்பந்து வீச்சாளர் ரப்யா கான் 3 விக்கெட்டும் சாய்த்தனர். மருபா அக்தர் ஆட்டநாயகியாக தேர்வு செய்யப்பட்டார். மகளிர் ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணியை வங்காளதேசம் வீழ்த்துவது இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now