
இந்தியாவுக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்கா அணி விளையாடும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நாளை தொடங்குகிறது. பாக்ஸிங் டே போட்டியாக நடைபெறும் இப்போட்டியில் வென்று ஆரம்பத்திலேயே முன்னிலை பெறுவதற்கு இரு அணிகளும் தயாராகியுள்ளன. அதில் தென் ஆப்பிரிக்காவை முதல் முறையாக அவர்களது ஊரில் தோற்கடித்து இந்தியா சாதனை படைக்கும் என்று எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
இந்தாண்டு உலகக் கோப்பையில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி வெற்றியை சுவைத்த இந்தியா தற்சமயத்தில் நல்ல ஃபார்மில் இருப்பதால் இத்தொடரில் வெல்வதற்கான வாய்ப்பு அதிகமாகவே இருக்கிறது. ஆனாலும் 2023 உலகக்கோப்பையில் 24 விக்கெட்டுகள் எடுத்து எதிரணிகளை தெறிக்க விட்ட முகமது ஷமி இத்தொடரில் காயத்தால் விலகியுள்ளது இந்தியாவுக்கு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் காயத்தால் விலகிய முகமது ஷமிக்கு பதிலாக களமிறங்கப் போகும் மாற்று வீரர் கூட மிகப்பெரிய அழுத்தத்தை கொடுக்கும் தரத்தை இந்திய அணி கொண்டிருப்பதாக தென் ஆப்பிரிக்கா கேப்டன் டெம்பா பவுமா கூறியுள்ளார். எனவே சொந்த மண்ணில் இந்தியாவிடம் தோற்காமல் இருந்து வரும் சாதனையை தக்க வைக்க தாங்கள் சிறப்பாக செயல்படுவது அவசியம் என்று அவர் கூறியுள்ளார்.