தவான், கோலி வரிசையில் புதிய சாதனை நிகழ்த்திய ஸ்மிருதி மந்தனா!
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் மூன்றாயிரம் ரன்களைக் கடந்த மூன்றாவது இந்திய வீராங்கனை எனும் சாதனை ஸ்மிருதி மந்தனா படைத்துள்ளார்.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது போட்டி இன்று நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி ஹர்மன்ப்ரீத் கவுரின் அபாரமான சதத்தின் மூலமாக 50 ஓவர்கள் முடிவில் 333 ரன்களைச் சேர்த்தது. மேலும் இப்போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 40 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார்.
Trending
இதன்மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 3 ஆயிரம் ரன்களைக் கடந்த மூன்ராவது இந்திய வீராங்கனை என்ற சாதனையை ஸ்மிருதி மந்தனா படைத்தார். இதற்கு முன்பு இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் இரண்டு கேப்டன்களான ஹர்மன்ப்ரீத் கவுர், மிதாலி ராஜ் ஆகியோர் இந்த சாதனையைப் படைத்திருந்தார்.அதிலும் மிதாலி ராஜ் 88 போட்டிகளில் 3 ஆயிரம் ரன்கள் என்ற இலக்கை எட்டினார்.
ஆனால் ஸ்மிருதி மந்தனா 76 போட்டிகளில் இந்த இலக்கை எட்டி சாதனை படைத்துள்ளார். இதனால் மகளிர் கிரிக்கெட்டில் மிகக் குறைந்த போட்டிகளில் 3 ஆயிரம் ரன்களை எட்டிய வீராங்கனை என்ற பெருமையை ஸ்மிருதி பெற்றார்.
ஒட்டுமொத்தமாக ஒப்பிடும்போது ஷிகர் தவான், விராட் கோலிக்கு பிறகு ஸ்மிருதி மந்தனா இடம் பெற்றுள்ளார். ஷிகர் தவான் 72 போட்டிகளிலும், விராட் கோலி 75 போட்டிகளிலும் 3 ஆயிரம் ரன்கள் என்ற இலக்கை எட்டினர்.
ஒட்டுமொத்த மகளிர் கிரிக்கெட்டில் 22 வீராங்கனைகள் 3 ஆயிரம் ரன்களைக் கடந்துள்ளனர். இதில் ஸ்மிருதி மந்தனா மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளார். முதலிடத்தை பெலின்டா கிளார்க் (62 போட்டிகள்), இடண்டாவது இடத்தை மெக் லேன்னிங் (64 போட்டிகள்) ஆகியோர் பெற்றுள்ளனர்.
Win Big, Make Your Cricket Tales Now