
தென் ஆப்பிரிக்க மகளிர் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள், மற்றும் டி20 தொடரிலும், ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானாது இன்று பெங்களூருவில் தொடங்கியது. இதில் இன்று நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து தென் ஆப்பிரிக்க மகளிர் அணியை முதலில் பந்துவீச அழைத்தது.
அதன்படி களமிறங்கிய இந்திய மகளிர் அணிக்கு ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷஃபாலி வர்மா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஷஃபாலி வர்மா 7 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய தயாளான் ஹேமலதா 12 ரன்களுக்கும், கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 10 ரன்களுக்கும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 17 ரன்களுக்கும், ரிச்சா கோஷ் 3 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் இந்திய அணி 99 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
பின்னர் களமிறங்கிய தீப்தி சர்மா ஒருபக்கம் நிதானமாக விளையாட, மறுமுனையில் மற்றொரு தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தனது 6ஆவது சர்வதேச ஒருநாள் சதத்தைப் பதிவுசெய்து அசத்தியது. அதன்பின் 37 ரன்கள் எடுத்த நிலையில் தீப்தி சர்மா விக்கெட்டை இழக்க, மறுமுனையில் சிறப்பாக விளையாடி சதம் கடந்திருந்த ஸ்மிருதி மந்த 12 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 117 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய பூஜா வஸ்திரேகர் 37 ரன்களைச் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழாகாமல் இருந்தார்.