
தென் ஆப்பிரிக்க மகளிர் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களிலும், ஒரே ஒரு டெஸ்ட் போட்டியிலும் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த ஒருநாள் தொடரை இந்திய மகளிர் அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி தென் ஆப்பிரிக்க அணியை ஒயிட்வாஷ் செய்து அசத்தியது. அதன்பின் நடைபெற்ற டெஸ்ட் போட்டியிலும் இந்திய மகளிர் அணியானது 10 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க மகளிர் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்தது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரானது இன்று தொடங்கியது.
அதன்படி இரு அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி இன்று சென்னை சேப்பாக்கத்தில் அமைந்துள்ள எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு கேப்டன் லாரா வோல்வார்ட் - தஸ்மின் பிரிட்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் லாரா வோல்வார்ட் 3 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 33 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.
பின்னர் இணைந்த மரிஸான் கேப் - தஸ்மின் பிரிட்ஸ் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தினர். ஒருகட்டத்திற்கு இருவரும் இணைந்து அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாச அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இதில் தஸ்மின் பிரிட்ஸ் 40 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்ய, மறுபக்கம் சிறப்பாக விளையாடிய மரிஸான் கேப் 30 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். பின்னர் இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டிற்கு 96 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில், மரிஸான் கேப் 8 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட 57 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.