
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்றுவரும் டி20 தொடரின் முதலிரண்டு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்துள்ளன.
இதையடுத்து இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் வெற்றியாளரைத் தீர்மனிக்கும் கடைசி போட்டியானது இன்று நவி மும்பையில் உள்ள டிஒய் பாட்டில் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டிஸ் மகளிர் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ஸ்மிருதி மந்தனா மற்றும் உமா சேத்ரி இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் உமா சேத்ரி 2 ஆவது பந்திலேயே ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.
அதன்பின் ஜோடி சேர்ந்த ஸ்மிருதி மந்தனா மற்றும் ஜெமிமா ரோட்ரிக்ஸ் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இப்போட்டியிலும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்மிருதி மந்தனா தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இதன்மூலம் நடப்பு டி20 தொடரில் அவர் விளையாடிய மூன்று போட்டிகளிலும் அரைசதம் கடந்து அசத்தியுள்ளார். மேற்கொண்டு இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டிற்கு 98 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் 39 ரன்களில் ஜெமிமா ரோட்ரிக்ஸ் தனது விக்கெட்டை இழந்தார்.