உலகக்கோப்பை தொடரிலிருந்து விலகும் இலங்கை கேப்டன்; கருணரத்னே சேர்ப்பு!
இந்தியாவில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரிலிருந்து காயம் காரணமாக இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனகா விலகியுள்ளார்.

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணி தென் ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் படுதோல்வியைச் சந்தித்ததுள்ளது. இதனால் அந்த அணி புள்ளிப்பட்டியளில் 6ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
அதிலும் குறிப்பாக அந்த அணியின் நட்சத்திர வீரர் வநிந்து ஹசரங்கா தொடரில் விளையாடாதது, காயத்திலிருந்து மீண்டுள்ள மஹீஷ் தீக்ஷ்னா சரியாக செயல்படாமல் இருப்பதும், குட்டி மலிங்கா என்றழைக்கப்பட்ட மதீஷா பதிரானா ரன்களை வாரி வழங்குவதும், கேப்டன் ஷனகா சரியான முடிவுகளை மேற்கொள்ளாததும் அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் பாகிஸ்தனுக்கு எதிரான போட்டியின் போது இலக்கை அணி கேப்டன் தசுன் ஷனகா காயமடைந்தார். இந்நிலையில் அவரது காயம் தீவிரமடைந்ததன் காரணமாக தற்போது நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரிலிருந்து தசுன் ஷனகா விலகியுள்ளதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.
மேலும் அவருக்கு மாற்று வீரராக சமீகா கருணரத்னெ அணியில் சேர்க்கப்படுவார் என்றும், அணியின் துணைக்கேப்டனான குசால் மெண்டிஸ் எஞ்சியுள்ள போட்டிகளில் இலங்கை அணியை வழிநடத்துவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இலங்கை அணிக்கு மேலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வரும் 16ஆம் தேதி வலிமை வாய்ந்த ஆஸ்திரெலிய அணியை எதிர்த்து இலங்கை அணி விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now