ஐபிஎல் 2021: சீட்டுக்கட்டாய் சரிந்த விக்கெட்டுகள்; தோள்கொடுத்து உதவிய கெய்க்வாட்!
மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 157 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
ஐபிஎல் 14வது சீசனின் 2ஆம் பாதி இன்று முதல் நடக்கின்றன. இன்றைய போட்டியில் சாம்பியன் அணிகளான மும்பை இந்தியன்ஸும் சிஎஸ்கேவும் விளையாடிவருகின்றன. இதில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார்.
மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, முழு உடற்தகுதி இல்லாத காரணத்தால் இன்றைய போட்டியில் ஆடவில்லை. அதேபோல் மும்பை அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவும் இன்றைய போட்டியில் பங்கேற்கவில்லை.
Trending
இதையடுத்து முதலில் பேட்டிங்கைத் தொடங்கிய சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர் டூ பிளெசிஸ் முதல் ஓவரிலேயே ரன்னே அடிக்காமல் டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். இதையடுத்து களத்திற்கு வந்த மொயின் அலியும் 2ஆவது ஓவரில் டக் அவுட்டாக்கி அதிர்ச்சியளித்தார்.
அதன்பின் அதே ஓவரிலேயே அம்பாதி ராயுடுவுக்கு கையில் ஏற்பட்ட காயம் காரணமாக ரிட்டயர் ஹர்ட் முறையில் வெளியேறினார். அதன்பின்னர் களத்திற்கு வந்த சுரேஷ் ரெய்னா 4 ரன்னில் டிரெண்ட் போல்ட்டின் பந்தில் ஆட்டமிழக்க, 3 ஓவரில் வெறும் 7 ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தத்தளித்தது.
அதன்பின் அதிரடியாக விளையாடி அணியை மீட்டெடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட மகேந்திர சிங் தோனியும் 3 ரன்கள் எடுத்திருந்த நிலையில், சிக்சர் அடிக்க முயற்சித்து ட்ரெண்ட் போல்டிடம் கேட்ச் கொடுத்தார்.
பின் ருதுராஜ் கெய்க்வாட்டுடன் இணைந்த ஜடேஜா நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பைத் தடுத்தார். தொடர்ந்து அபாரமாக விளையாடி வந்த ருதுராஜ் கெய்க்வாட் அரைசதம் அடித்து சென்னை அணியை மீட்டெடுத்தார்.
இதையடுத்து 26 ரன்களில் ஜடேஜா ஆட்டமிழக்க, மறுமுனையில் தொடர்ந்து அதிரடியில் மிரட்டி வந்த கெய்க்வாட் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாச, அவருடன் இணைந்த பிராவோவும் சிக்சர்களை பறக்கவிட்டு மிரட்டினார்.
அதிலும் சிஎஸ்கே தொடக்க வீரர்களுக்கு அச்சுறுத்தலாக இருந்த ட்ரெண்ட் போல்டின் கடைசி ஓவரில் 24 ரன்களை இந்த ஜோடி விளாசியது. இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் சிஎஸ்கே அணி 6 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்களை எடுத்தது.
Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021
இதில் அதிகபட்சமாக இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ருதுராஜ் கெய்க்வாட் 88 ரன்களைச் சேர்த்தார். மும்பை அணி தரப்பில் ஆடம் மில்னே, ட்ரெண்ட் போல்ட், பும்ரா தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
Win Big, Make Your Cricket Tales Now