
இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் கரோனா பரவல் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டது. மொத்தம் 60 போட்டிகள் கொண்ட இத்தொடரில் 29 போட்டிகள் மட்டுமே நடைபெற்றன. அதனால் எஞ்சிய 31 போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தவுள்ளதாக பிசிசிஐ அறிவித்தது.
இந்த நிலையில், நடப்பு ஐபிஎல் தொடரில் கடந்த மே மாதம் 2ஆம் தேதி நடந்த போட்டியின்போது இரண்டு சூதாட்ட தரகர்களை மைதானத்துக்குள் நுழைய சிறப்பு அனுமதி வழங்கி ஏற்பாடு செய்து கொடுத்ததாக, டெல்லி கிரிக்கெட் சங்கத்தின் பாலம் சிங், வீரேந்தர் சிங் ஷா ஆகியோர் டெல்லி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மனிஷ் கன்சல் மற்றும் க்ரிஷன் கார்க் ஆகிய இரு நபர்களுக்கு ஐபிஎல் போட்டியை பார்க்க அனுமதிக்கும் சிறப்பு அங்கீகார அட்டைகள் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் ராஜஸ்தான் ராயல்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இடையேயான போட்டி குறித்த தகவல்களை பகிர்ந்ததற்காக ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.