மீண்டும் தொடங்கும் ஐபிஎல் தொடர்; வெளியான தகவலால் ரசிகர்கள் மகிழ்ச்சி!
ஒத்திவைக்கப்பட்டுள்ள ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டுகள் அனைத்தும் செப்.15 முதல் அக்.15 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி தொடங்கியது. சென்னை, மும்பையில் போட்டி முடிந்த நிலையில் டெல்லி, அகமதாபாத்தில் ஆட்டங்கள் நடைபெற்று கொண்டிருக்கும் போது பயோ பபுளில் இருந்த வீரர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து 29 ஆட்டங்கள் முடிந்த நிலையில் ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் பாதியில் நிறுத்தப்பட்டது. இன்னும் 31 ஆட்டங்கள் நடத்தப்பட வேண்டி உள்ளது.
Trending
எஞ்சிய ஐபிஎல் ஆட்டங்களை டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன்பு நடத்த வேண்டும் என்பதில் பிசிசிஐ தீவிரமாக உள்ளது. உலக கோப்பை போட்டி அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெறுகிறது. இதனால் ஐ.பி.எல். தொடரின் எஞ்சிய ஆட்டங்களை செப்டம்பரில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே ஐ.பி.எல். தொடரின் எஞ்சிய ஆட்டங்களை செப்டம்பர் 15ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பிசிசிஐ இறுதி முடிவை எடுத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அக்டோபர் 15ஆம் தேதி வரை ஒரு மாத காலத்திற்கு ஐ.பி.எல். எஞ்சிய ஆட்டங்கள் அனைத்தும் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. வருகிற 29ஆம் தேதி நடைபெறும் இந்திய கிரிக்கெட் வாரியம் சிறப்பு பொதுக்குழுவில் இது குறித்த இறுதி முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் நடப்பாண்டு டி20 உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் கரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக இத்தொடர் இந்தியாவில் நடத்தப்படுமா என்பதற்கான பதிலும் பிசிசிஐ கூட்டத்தின் முடிவிலேயே தெரியவரும்.
Win Big, Make Your Cricket Tales Now