ஐபிஎல் 2021: டெல்லி பவுலர்ஸை பதம் பார்த்த சின்ன தல & கடைக்குட்டி சிங்கம்; டெல்லி அணிக்கு 189 ரன்கள் இலக்கு!
சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையேயான நடப்பாண்
சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையேயான நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் லீக் போட்டி மும்பை வான்கேடே மைதானத்தில் இன்று நடைபெற்றுவருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் ரிஷப் பந்த் முதலில் சிஎஸ்கே அணியை பேட்டிங் செய்ய அழைத்தார்.
இதையடுத்து களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ருதுராஜ் கெய்க்வார், ஃபாப் டூ பிளெசிஸ் இணை தொடக்கம் கொடுத்தது. ஆனால் சிஎஸ்கேவிற்கு ஆரம்பமே அதிர்ச்சியளிக்கும் வகையில் டூ பிளெசிஸ் ரன் ஏதுமின்றியும், கெய்க்வாட் 5 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
Trending
இதையடுத்து ஜோடி சேர்ந்த சுரேஷ் ரெய்னா - மொயீன் அலி இணை களமிறங்கியது முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. பின்னர் அஸ்வின் வீசிய 9ஆவது ஓவரில் அடுத்தடுத்து இரண்டு சிக்சர்களை பறக்கவிட்ட மொயீன், அடுத்த பந்திலேயே ரிவர்ஸ் ஸ்வீப் அடிக்க முயற்சித்து 36 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
பின்னர் களமிறங்கிய அம்பத்தி ராயூடுவும் தனது பங்கிற்கு 23 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழக்க, மறுமுனையில் அதிரடி ஆட்டத்தைத் தொடர்ந்த சின்ன தல ரெய்னா 32 பந்துகளில் அரைசதம் கடந்து எதிரணியை அலறவிட்டார். அதன்பின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ரெய்னா 54 ரன்கள் எடுத்திருந்த நிலையில், எதிர்பாராதவிதாமக கிறிஸ் வோக்ஸிடம் ரன் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார்.
அதன்பின் களமிறங்கிய கேப்டன் தோனி, ஆவேஷ் கான் வீசிய பந்தை சிக்சர் விளாச முயற்சித்து இன்சைட் ஹெட்ச் முறையில் போல்டாகி ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார்.
இறுதிகட்ட ஓவர்களில் ஜோடி சேர்ந்த ஜடேஜா - சாம் கரன் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் சிஎஸ்கே அணி 7 விக்கெட்டுகளை இழந்து 190 ரன்களை குவித்தது.
சிஎஸ்கே அணி தரப்பில் அதிகபட்சமாக சுரேஷ் ரெய்னா 54 ரன்களையும், சாம் கரன் 34 ரன்களையும், மொயீன் அலி 36 ரன்களையும் சேர்த்தனர். டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தரப்பில் ஆவேஷ் கான், கிறிஸ் வோக்ஸ் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். இதையடுத்து 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பேட்டிங் செய்துவருகிறது.
Win Big, Make Your Cricket Tales Now