
நடப்பு ஐபிஎல் தொடரின் 50ஆவது லீக் போட்டி நேற்று துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் புள்ளிப் பட்டியலில் முதலிரு இடங்களை பிடித்து இருந்த தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின.
இந்த போட்டியில் முதலில் விளையாடிய சென்னை அணியானது துவக்க வீரர்களின் விக்கெட்டை அடுத்தடுத்து இழக்க அதன் பின்னர் வந்த வீரர்கள் அதிரடியாக விளையாட முடியாமல் போனது. இறுதியில் ராயுடு 43 பந்துகளுக்கு 55 ரன்களையும், தோனி 18 ரன்களையும் குவித்தனர். எந்த ஒரு கட்டத்திலும் சென்னை அணியால் அதிரடியாக ஸ்கோர் செய்ய முடியவில்லை. இதனால் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 136 ரன்களை சிஎஸ்கே அணி குவித்தது.
பின்னர் 137 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய டெல்லி அணியானது துவக்கத்தில் சற்று அதிரடியாக ஆடினாலும் பின்னர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து சற்று சறுக்கியது. இருப்பினும் இறுதியில் பொறுமையாகவே விளையாடிய டெல்லி அணி ஹெட்மயரின் சிறப்பான ஆட்டம் காரணமாக 19.4 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்களை குவித்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பெற்ற வெற்றி மூலம் டெல்லி அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியது.