
ஐபிஎல் தொடரின் 15வது சீசனுக்கான வீரர்கள் ஏலம் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ள நிலையில் அதில் பங்கேற்ற 590 வீரர்களிலிருந்து இறுதியாக 204 பேர் மட்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். இந்த ஏலத்தில் அதிகபட்சமாக இந்தியாவின் விக்கெட் கீப்பர் பேட்டர் இஷான் கிசான் 15.25 கோடிகளுக்கு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டு சாதனை படைத்தார்.
இந்த ஏலத்தில் வரலாற்றின் முதல் ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வாங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் அதிகபட்சமாக இளம் இந்திய வீரர் பிரசித் கிருஷ்ணாவை 10 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. அதைப்போல அந்த அணியில் வெளிநாட்டு வீரர்கள் பிரிவில் அதிக பட்சமாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் சிம்ரான் ஹெட்மையர் 8.5 கோடிக்கு வாங்கப்பட்டார்.
இந்த மெகா ஏலத்துக்கு முன்பாக சஞ்சு சாம்சன், ஜோஸ் பட்லர், யஷாஹ்வி ஜெய்ஸ்வால் ஆகிய 3 வீரர்களை ராஜஸ்தான் ராயல்ஸ் தக்க வைத்திருந்தது. இதையடுத்து நடைபெற்ற ஏலத்தின் முடிவில் அந்த அணியில் 24 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். இதில் 16 இந்திய வீரர்களும் 8 வெளிநாட்டு வீரர்களும் உள்ளார்கள். இவர்களை வாங்க செலவு செய்யப்பட்ட 89.05 கோடிகள் போக அந்த அணியிடம் 95 லட்சம் மீதித்தொகை உள்ளது.