
பல வருடங்களாக ஐபிஎல் புதிய திறமைகளை கண்டுபிடித்து வாய்ப்பளித்து வருகின்றது. அதேபோல் ஐபிஎல் மெகா ஏலம் பலரின் கனவுகளை, பலரின் திறமைகளுக்கு சரியான வெகுமதியை கொடுத்துள்ளது என்றால் மிகையல்ல. சில நாட்கள் முன் நடந்த ஐபிஎல் ஏலமே அதற்கு சான்று.
இந்த ஐபிஎல் ஏலத்தில் மட்டும் எண்ணற்ற எளிய பின்னணியை கொண்ட வீரர்கள் பலருக்கு தகுந்த மதிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. டென்னிஸ் பாலில் மட்டுமே கிரிக்கெட் விளையாடிய பஞ்சாப்பின் ரமேஷ் குமார் முதல் சச்சின் மகன் அர்ஜுன் வரை வாய்ப்புகள் கிடைத்துள்ளன.
இந்திய வீரர்கள் மட்டுமின்றி, வெளிநாட்டைச் சேர்ந்த பலரும் ஐபிஎல் மூலமாக உலகறியப்பட்டு வருகிறார்கள், பாகிஸ்தான் வீரர்களை தவிர. ஐபிஎல் தொடக்க காலத்தில் ஷாஹித் அப்ரிடி மற்றும் ஷோயப் அக்தர் உள்ளிட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்று விளையாடினர். இரு நாடுகளுக்கும் இடையேயான எல்லை தாண்டிய பதற்றம் மற்றும் அரசியல் அழுத்தம் காரணமாக அடுத்தடுத்த ஆண்டுகளில் பாகிஸ்தான் வீரர்கள் ஐபிஎல்லில் விளையாட தடை விதிக்கப்பட்டது.