ஐபிஎல் 2022: எங்கள் தோல்விக்கு இதுவே காரணம் - கேஎல் ராகுல்!
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூர் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
15ஆவது ஐபிஎல் தொடரின் 31வது லீக் போட்டியில் கே.எல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், டூபிளசிஸ் தலைமையிலான பெங்களூர் அணியும் மோதின. மும்பை பட்டீல் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கே.எல் ராகுல் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்தது. பெங்களூர் அணியில் அதிகபட்சமாக டூ பிளெசிஸ் 96 ரன்கள் எடுத்தார்.
Trending
இதனையடுத்து 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்கை துரத்தி களமிறங்கிய லக்னோ அணிக்கு க்ரூணல் பாண்டியா 42 ரன்களும், கேப்டன் கே.எல் ராகுல் 30 ரன்களும் எடுத்து கொடுத்தாலும், மற்ற வீரர்கள் பெங்களூர் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறி அடுத்தடுத்து விக்கெட்டுகளையும் இழந்ததால் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் மட்டுமே எடுத்த லக்னோ அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
பெங்களூர் அணியில் அதிகபட்சமாக ஹசில்வுட் 4 விக்கெட்டுகளையும், ஹர்சல் பட்டேல் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இந்தநிலையில், பெங்களூர் அணியுடனான இந்த தோல்வி குறித்து பேசிய லக்னோ அணியின் கேப்டனான கே.எல் ராகுல், கூடுதலாக 15 ரன்கள் விட்டுகொடுத்ததே தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்துவிட்டதாக வேதனை தெரிவித்துள்ளார்.
இது குறித்து கே.எல் ராகுல் பேசுகையில்,“பேட்டிங்கில் நாங்கள் சிறப்பாகவே துவங்கினோம், முதல் இரண்டு விக்கெட்டுகளை விரைவாக இழந்த போதிலும் பவர்ப்ளே ஓவர்களில் 50 ரன்கள் குவித்தோம். இந்த ஆடுகளத்தில் பெங்களூர் அணி 180 ரன்கள் எடுக்கவிட்டதன் மூலம், நாங்கள் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் விட்டுகொடுத்துவிட்டோம், இதுவே இந்த போட்டியில் எங்களுக்கு பின்னடைவை கொடுத்துவிட்டது.
பெங்களூர் அணி முதல் சில விக்கெட்டுகளை இலகுவாக வீழ்த்திவிட்டோம், ஆனால் மிடில் ஓவர்களில் எங்களால் அதை செய்ய முடியவில்லை. டூ பிளெசியை போன்று எங்கள் அணியில் ஒருவர் நீண்ட நேரம் களத்தில் நின்று விளையாடியிருந்தாலும் போட்டியின் முடிவு வேறு மாதிரியாக இருந்திருக்கும். பார்டனர்சிப் எங்களுக்கு சரியாக அமையவில்லை. எங்கள் அணி அனைத்து வகையிலும் வலுவான அணியாகவே உள்ளது.
ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியிலும், பெங்களூர் அணிக்கு எதிரான இந்த போட்டியிலும் நாங்கள் சிறப்பாகவே விளையாடி எதிரணி வீரர்களை நெருக்கடிக்குள்ளாக்கினோம், ஆனால் அதை எங்களால் நீண்ட நேரம் தக்க வைக்க முடியவில்லை. அடுத்தடுத்த போட்டிகளில் சிறப்பாக செயல்படுவோம்” என்று தெரிவித்தார்.
Win Big, Make Your Cricket Tales Now