ஐபிஎல் 2022: ஆர்சிபியை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெற்றது சிஎஸ்கே!
ஐபிஎல் 2022: ஆர்சிபிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, இந்த சீசனில் முதல் வெற்றியைப் பதிவுசெய்தது.
ஐபிஎல் 15ஆவது சீசனின் இன்றைய போட்டியில் சிஎஸ்கேவும் ஆர்சிபியும் ஆடிவருகின்றன. இதற்கு முன் ஆடிய 4 போட்டிகளிலும் படுதோல்வி அடைந்த சிஎஸ்கே அணி, இந்த போட்டியில் முதல் வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் களமிறங்கியது.
மும்பை டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் ஃபாஃப் டுப்ளெசிஸ் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
Trending
அதன்படி முதலில் பேட்டிங் ஆடிய சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் 17 ரன்னில் ஆட்டமிழக்க, மொயின் அலியும் 3 ரன்னில் நடையை கட்ட, 6.4 ஓவரில் 36 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து படுமோசமான நிலையில் இருந்தது சிஎஸ்கே அணி.
அதன்பின்னர் ஜோடி சேர்ந்த ராபின் உத்தப்பாவும் ஷிவம் தூபேவும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10 ஓவருக்கு பின் அடி வெளுத்துவாங்கினர். 10 ஓவரில் 60 ரன்கள் மட்டுமே அடித்திருந்தது சிஎஸ்கே அணி. ஆனால் அதன்பின்னர் உத்தப்பாவும் தூபேவும் அதிரடியாக ஆடினர். 11ஆவது ஓவரில் ஒரு சிக்ஸரும் பவுண்டரியும் அடித்த துபே, 12ஆவது ஓவரில் ஒரு சிக்ஸர் அடித்தார்.
மேக்ஸ்வெல் வீசிய 13ஆவது ஓவரில் உத்தப்பா 3 சிக்ஸர்கள் விளாச, அந்த ஓவரில் சிஎஸ்கே அணி 100 ரன்களை கடந்தது. 14ஆவது ஓவரில் துபே 2 பவுண்டரிகள் அடித்தார். 15வது ஓவரில் உத்தப்பா ஒரு பவுண்டரியும் சிக்ஸரும் அடிக்க, ஷிவம் துபேவும் ஒரு பவுண்டரி அடித்தார். உத்தப்பா மற்றும் ஷிவம் துபே ஆகிய இருவருமே அரைசதம் அடித்தனர். அரைசதத்திற்கு பின்னரும் அடி நொறுக்கி எடுத்தனர்.
அதன்பின் 17ஆவது ஓவரில் உத்தப்பா 2 சிக்ஸர்களும் ஒரு பவுண்டரியும் அடித்தார். ஆகாஷ் தீப் வீசிய 18ஆவது ஓவரில் ஷிவம் துபே 2 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரி அடித்தார். 19ஆவது ஓவரில் துபேவும் உத்தப்பாவும் தலா ஒரு சிக்ஸர் அடித்தனர். அதே ஓவரில் 88 ரன்னில் உத்தப்பா ஆட்டமிழந்தார். கடைசி ஓவரிலும் துபே 2 சிக்ஸர் அடித்தார். கடைசி பந்தில் சிக்ஸர் அடித்தால் துபே சதத்தை எட்டும் வாய்ப்பு இருந்தது. ஆனால் துபேவால் சிக்ஸர் அடிக்க முடியவில்லை.
ராபின் உத்தப்பா 50 பந்தில் 4 பவுண்டரிகள் மற்றும் 9 சிக்ஸர்களுடன் 88 ரன்களை குவித்தார். 46 பந்தில் 5 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்களுடன் ஷிவம் துபே 95 ரன்களை குவித்தார். முதல் 10 ஓவரில் 60 ரன்கள் மட்டுமே அடித்திருந்த சிஎஸ்கே அணி, உத்தப்பா மற்றும் துபேவின் காட்டடியால் கடைசி 10 ஓவரில் 156 ரன்களை குவித்த சிஎஸ்கே அணி, 20 ஓவரில் 216 ரன்களை குவித்தது.
இதையடுத்து இமாலய இலக்கை துரத்திய ஆர்சிபி அணியில் கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் 8 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த விராட் கோலி ஒரு ரன்னுடன் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
அதனைத் தொடர்ந்து வந்த கிளென் மேக்ஸ்வெல் அதிரடியாக விளையாடி 23 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். பிறகு ஜோடி சேர்ந்த இளம் வீரர்கள் சுயாஸ் பிரபுதேசாய் - ஷபாஸ் அஹ்மத் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இதில் 34 ரன்களைச் சேர்த்திருந்த பிரபுதேசாய் தீக்ஷனா பந்துவீச்சில் ஆட்டமிழக்க, 44 ரன்களில் ஷபாஸ் அஹ்மதும் விக்கெட்டை இழந்தார். அதனைத் தொடர்ந்து வந்த வநிந்து ஹசரங்கா, ஆகாஷ் தீப் ஆகியோர் ஜடேஜாவின் ஓரே ஓவரில் அடுத்தடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
இதனால் ஆட்டம் சிஎஸ்கே பக்கம் திரும்பியது. ஆனால் மறுமுனையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த தினேஷ் கார்த்திக், முகேஷ் சௌத்ரி வீசிய 17ஆவது ஓவரில் 23 ரன்களை விளாசி ஆட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தினார்.
அதன்பின் பிராவோ வீசிய 18ஆவது ஓவரில் சிக்சர் விளாச முயர்சித்த தினேஷ் கார்த்திக், ஜடேஜாவிடம் பவுண்டரி எல்லையில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இப்போட்டியில் 14 பந்துகளைச் சந்தித்த அவர், 34 ரன்களை குவித்தார். அவரது விக்கெட்டின் மூலம் சிஎஸ்கேவின் வெற்றியும் உறுதியானது.
இறுதியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 193 ரன்களை மட்டுமே சேர்த்தது. சிஎஸ்கே தரப்பில் மகேஷ் தீக்ஷனா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதன்மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் சிஎஸ்கே அணி இந்த சீசனில் தங்களது முதல் வெற்றியைப் பெற்றது.
Win Big, Make Your Cricket Tales Now