
அடுத்தாண்டு ஐபிஎல் தொடரில் இரு அணிகள் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன. அடுத்த வருடம் முதல் லக்னோ, ஆமதாபாத் நகரங்களை அடிப்படையாகக் கொண்டு இரு புதிய அணிகள் இணைகின்றன. இதில் லக்னௌ அணியை, கொல்கத்தாவைச் சோ்ந்த தொழிலதிபரான சஞ்சீவ் கோயங்காவின் ஆா்.பி.எஸ்.ஜி. குழுமம் ரூ. 7,090 கோடிக்கு வாங்கியுள்ளது. ஆமதாபாத் அணியைச் சா்வதேசப் பங்கு முதலீட்டு நிறுவனமான சிவிசி கேபிடல் ரூ. 5,600 கோடிக்குச் சொந்தமாக்கியுள்ளது.
ஐபிஎல் 2022 போட்டியில் விளையாடும் வீரர்களுக்கான மெகா ஏலம் விரைவில் நடைபெறவுள்ளது. இதற்காக வீரர்களைத் தக்கவைப்பது தொடர்பான பணிகளில் அணிகள் இறங்கியுள்ளன.
பழைய 8 அணிகளும் 4 வீரர்களைத் தக்கவைத்துக்கொள்ள அனுமதிக்கப்படுகின்றன. ஏலத்துக்கு முன்பு உள்ள வீரர்களின் பட்டியலில் இருந்து 3 வீரர்களைத் தேர்வு செய்துகொள்ள இரு புதிய அணிகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. பழைய 8 அணிகள் தக்கவைக்கும் 4 வீரர்களில் மூவர் இந்தியராகவும் ஒருவர் வெளிநாட்டு வீரராகவும் இருக்கலாம். அல்லது தலா இரு வெளிநாட்டு, உள்நாட்டு வீரர்களாகவும் இருக்கலாம்.