
மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று இரவு கோலாகலமாக துவங்கி நடைபெற்ற 15ஆவது ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சிஎஸ்கே அணியை கொல்கத்தா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. அதோடு இந்த தொடரில் கொல்கத்தா அணி தங்களது முதல் வெற்றியை பலம் வாய்ந்த சென்னை அணிக்கு எதிராக பெற்று சிறப்பான துவக்கத்தை பெற்றுள்ளது.
இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் விளையாடிய சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 131 ரன்களை மட்டுமே குவிக்க அடுத்ததாக விளையாடிய கொல்கத்தா அணி 18.3 ஓவர்களில் எளிதாக அந்த ரன்களை சேஸிங் செய்து வெற்றி பெற்றது.
இப்படி சிறிய இலக்கினை கொல்கத்தா எளிதில் சேசிங் செய்தாலும் சென்னை அணி கடைசி வரை தங்களது நம்பிக்கையை கைவிடாமல் போராடினர் என்றே கூறலாம். அதிலும் குறிப்பாக சென்னை அணியின் அனுபவ முன்னணி வீரரான பிராவோ நேற்றைய போட்டியில் தனது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி இருந்தார்.