
ஐபிஎல் 15ஆவது சீசனின் இன்றைய போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் டெல்லி கேபிடள்ஸ் அணிகள் ஆடிவருகின்றன. மும்பை டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி கேப்டன் கேஎல் ராகுல் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
அதன்படி டெல்லி அணிக்கு பிரித்வி ஷாவும் டேவிட் வார்னரும் தொடக்க வீரர்களாக இறங்கினர். தொடக்கம் முதலே வழக்கம்போல அடித்து ஆடிய பிரித்வி ஷா, பவுண்டரிகளாக விளாசினார். அடித்து அனைவருக்கும் ஷோ காட்டும் டேவிட் வார்னரை மறுமுனையில் நிற்க வைத்து ஷோ காட்டினார் பிரித்வி ஷா. பவர்ப்ளேவை பயன்படுத்தி அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த பிரித்வி ஷா, 34 பந்தில் 61 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். அவர் ஆட்டமிழக்கும்போது டெல்லி அணியின் ஸ்கோரே 67 தான். அதில் 61 ரன்கள் பிரித்வி ஷா அடித்தது.
அதன்பின்னர் வார்னரை வெறும் 4 ரன்களுக்கு வீழ்த்திய ரவி பிஷ்னோய், ரோவ்மன் பவலை 3 ரன்களுக்கு அனுப்பிவைத்தார். அதன்பின்னர் ரிஷப் பந்த் - சர்ஃபராஸ் கானும் இணைந்து அடித்து ஆட முயற்சித்தனர். ஆனால் லக்னோ அணி பவுலர்கள் அதற்கு அனுமதிக்கவில்லை. வழக்கத்திற்கு மாறாக மிகவும் மந்தமாக ஆடிய ரிஷப் பந்த், ஆண்ட்ரூ டையின் பவுலிங்கில் மட்டும் சில பெரிய ஷாட்டுகளை ஆடினார். ஆனால் ரவி பிஷ்னோய், கிருஷ்ணப்பா கௌதம், ஆவேஷ் கான் ஆகியோரின் பவுலிங்கில் ரிஷப் - சர்ஃபராஸ் கானால் ஒன்றுமே செய்ய முடியவில்லை.