ஐபிஎல் 2022: பரபரப்பான ஆட்டத்தில் டெல்லியை வீழ்த்தியது லக்னோ!
ஐபிஎல் 2022: டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது.
ஐபிஎல் 15ஆவது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு மும்பை வான்கடேவில் தொடங்கி நடந்துவரும் போட்டியில் டெல்லி கேபிடள்ஸும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸும் விளௌயாடின.
இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் கேப்டன் கேஎல் ராகுல் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் ஆடிய லக்னோ அணியின் தொடக்க வீரர் குயிண்டன் டி காக் அதிரடியாக தொடங்கினார். 13 பந்தில் 23 ரன்கள் அடித்து அவர் ஆட்டமிழந்தார்.
Trending
அதன்பின் 2வது விக்கெட்டுக்கு கேஎல் ராகுலும் தீபக் ஹூடாவும் இணைந்து அடித்து ஆடி 95 ரன்களை குவித்தனர். இருவருமே அரைசதம் அடித்த நிலையில், தீபக் ஹூடா 34 பந்தில் 52 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.
அரைசதத்திற்கு பின்னரும் சிறப்பாக பேட்டிங் ஆடிய கேஎல் ராகுல் 77 ரன்களுக்கு ஷர்துல் தாகூரின் பவுலிங்கில் ஆட்டமிழந்தார். 51 பந்தில் 4 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 77 ரன்களை குவித்தார் ராகுல். இதனால் 20 ஓவரில் 195 ரன்கள் அடித்த லக்னோ அணி 196 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
அதன்பின் களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் பிரித்வி ஷா 5, டேவிட் வார்னர் 3 ரன்கள் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை பெரும் ஏமாற்றத்தை அளித்தனர்.
பின்னர் ஜோடி சேர்ந்த மிட்செல் மார்ஷ் - கேப்டன் ரிஷப் பந்த் இணை ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். அதன்பின் 37 ரன்கள் எடுத்திருந்த மிட்செல் மார்ஷ் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து களமிறங்கிய லலித் யாதவும் 3 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
மறுமுனையில் அரைசதம் கடப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பந்த் 44 ரன்களிலும், ரோவ்மன் பாவல் 35 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இறுதியில் அக்சர் படேல் - குல்தீ யாதவ் இணை இறுதிவரை வெற்றிக்காக போராடியது.
இதானால் கடைசி ஓவரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் வெற்றிபெற 21 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. ஸ்டோய்னிஸ் வீசிய அந்த ஓவரின் முதல் பந்தை குல்தீப் யாதவ் சிக்சருக்கு விளாசினார். ஆனால் அவரைத் தொடர்ந்து அக்ஸர் படேலால் அதனை செய்ய முடியவில்லை.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 189 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன்மூலம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றுபெற்று அசத்தியது.
லக்னோ அணி தரப்பில் மோசீன் கான் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி வெற்றிக்கு உதவினார்.
Win Big, Make Your Cricket Tales Now