ஐபிஎல் 2022: கடைசி பந்தில் ஆட்டத்தை முடித்த தோனி; மும்பையை வீழ்த்தியது சிஎஸ்கே!
ஐபிஎல் 2022: மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் மகேந்திர சிங் தோனியின் அதிரடியால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
ஐபிஎல் 15ஆவது சீசனின் இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸும் சிஎஸ்கேவும் ஆடிவருகின்றன. இந்த சீசனில் இரு அணிகளுமே படுமோசமாக ஆடிவரும் நிலையில், பரம எதிரிகளான இரு அணிகளுமே வெற்றி வேட்கையுடன் இந்த போட்டியில் மோதின.
மும்பை டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி கேப்டன் ஜடேஜா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்(அதுமட்டும்தான் செய்தார்). சிஎஸ்கே அணி 2 மாற்றங்களுடனும், மும்பை இந்தியன்ஸ் அணி 3 மாற்றங்களுடனும் களமிறங்கியது.
Trending
அதன்படி முதலில் பேட்டிங்கை தொடங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் இஷான் கிஷன் ஆகிய இருவரையுமே முதல் ஓவரிலேயே டக் அவுட்டாக்கி அனுப்பினார் முகேஷ் சௌத்ரி. பேபி ஏபி என்றழைக்கப்படும் இளம் அதிரடி வீரர் டிவால்ட் ப்ரெவிஸை தனது அடுத்த ஓவரான இன்னிங்ஸின் 3ஆவது ஓவரில் வீழ்த்தினார் முகேஷ் சௌத்ரி.
முகேஷ் சௌத்ரி அருமையாக பந்துவீசி ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை வீழ்த்தி கொடுத்தார். சமகாலத்தின் தலைசிறந்த ஃபீல்டரான ஜடேஜா, 2 எளிய கேட்ச்களை தவறவிட்டார். 23 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்துவிட்ட மும்பை அணி, அதன்பின்னரும் சூர்யகுமார் யாதவ்(32), ரித்திக் ஷோகீன்(25) மற்றும் பொல்லார்டு(14) ஆகியோரின் விக்கெட்டுகளை இழந்தது. சிஎஸ்கே அணியின் பவுலிங் சிறப்பாக இருந்தாலும், ஃபீல்டிங் படுமோசமாக இருந்தது. பிராவோ ஒரு கேட்ச், ஜடேஜா 2 கேட்ச், ஷிவம் துபே ஒரு கேட்ச் என கைக்கு வந்த நிறைய கேட்ச்களை தவறவிட்டனர் சிஎஸ்கே வீரர்கள். ஆனால் அதையும் மீறி மும்பை வீரர்கள் ஆட்டமிழந்தனர்.
ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்து ஆடி அரைசதம் அடித்த திலக் வர்மா கடைசி வரை களத்தில் நின்று 43 பந்தில் 51 ரன்கள் அடித்தார். ஜெய்தேவ் உனாத்கத் கடைசியில் 9 பந்தில் 19 ரன்கள் அடித்து பங்களிப்பு செய்ய, 20 ஓவரில் 155 ரன்கள் அடித்த மும்பை இந்தியன்ஸ் அணி, 156 ரன்கள் என்ற இலக்கை சிஎஸ்கேவிற்கு நிர்ணயித்தது.
இதையடுத்து இலக்கை துரத்திய சிஎஸ்கே அணிக்கும் பேரதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்தார். அவரைத் தொடர்ந்து வந்த மிட்செல் சாண்ட்னர் 11 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
அதன்பின் ஜோடி சேர்ந்த அனுபவ வீரர்கள் ராபின் உத்தப்பா - அம்பத்தி ராயூடு இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை சீரான வேகத்தில் உயர்த்தினர். இதனால் சிஎஸ்கே எளிதாக வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் இருந்தது.
ஆனால் 30 ரன்களில் உத்தப்பா ஆட்டமிழக்க, அடுத்து வந்த ஷிவம் தூபே 13 ரன்களுக்கும் விக்கெட்டை பறிகொடுத்தனர். மறுமுனையில் அரைசதம் கடப்பார் என எதிர்பார்க்கப்பட்ட அம்பத்தி ராயூடுவும் 40 ரன்களில் ஆட்டமிழந்தார். கேப்டன் ரவீந்திர ஜடேனா 3 ரன்களில் நடையைக் கட்டினார்.
இதனால் கடைசி இரண்டு ஓவர்களில் சிஎஸ்கே வெற்றிபெற 28 ரன்கள் தேவை என்ற இக்கட்டான சூழல் உருவானது. இறுதியில் கடைசி ஓவரில் 18 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. உனாத்கட் வீசிய கடைசி ஓவரின் முதல் பந்தில் பிரிட்டோரியஸ் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.
அதன்பின் ஓவரின் மூன்றாவது பந்தை சிக்சருக்கு பறக்கவிட்ட தோனி, அடுத்த பந்த பவுண்டரி விளாசி அசத்தினார். ஆனலும் கடைசி பந்தில் சிஎஸ்கேவுக்கு 4 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், எம் எஸ் தோனி பவுண்டரி விளாசி ஆட்டத்தை முடித்து வைத்தார்.
இதன்மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பெற்றது.
Win Big, Make Your Cricket Tales Now