
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் தொடர் தோல்வி, ரோஹித் ஷர்மாவின் மோசமான ஃபார்ம் என இந்தப்பட்டியலில் ஐபிஎல் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ள மற்றொரு விவகாரம் விராட் கோலியின் ஆட்டம்.
'ஃபுட் ஒர்க்' எனப்படும் பாத அசைவுகளை நேர்த்தியாக கையாண்டு, எதிர்வரும் எத்தகைய பந்துகளையும் நேர்த்தியாக பவுண்டரிக்கு விரட்டியும், சிக்சருக்கு தூக்கியடிக்கும் விராட் கோலியின் ஆட்டம் ஒருகாலத்தில் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. ஸ்டீவ் வாக், விவியன் ரிச்சர்ட்ஸ் உள்ளிட்ட மாபெரும் வீரர்களால் போற்றி புகழப்பட்ட விராட் கோலியின் ஆட்டம் இன்று விமர்சனப் பொருளாகி உள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடரில் விராட் கோலியின் பேட்டிங்கில் ஏதெனும் பிழை உள்ளது என ரசிகர்கள் நினைக்கும் அளவுக்கு அவரது மட்டைவீச்சு மந்தமாகி விட்டது. வழக்கமான அவரது ஸ்டைலுடன் பேட்டிங் க்ரீசுக்கு வருவதும், வந்த வேகத்திலேயே விக்கெட்டை பறிகொடுப்பதும், எதிர்முனையில் நிற்கும் துணை மட்டையாளரிடம் விரக்திப் பார்வையை சில நொடிகள் கொட்டி விட்டு பெவிலியினுக்கு நடையைக் கட்டுவதும் விராட் கோலிக்கு தற்போது வாடிக்கையாகிவிட்டது.