ஐபிஎல் 2022: சொந்த மைதானத்தில் விளையாடுவது குறித்து பதிலளித்த ரோஹித் சர்மா!
ஐபிஎல் 2022 போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி மட்டும் சொந்த மைதானத்தில் விளையாடுவது குறித்த விமர்சனங்களுக்கு அந்த அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பதில் அளித்துள்ளார்.
ஐபிஎல் 2022 போட்டி மார்ச் 26ஆம் தேதி தொடங்கி மே 29 அன்று நிறைவுபெறவுள்ளது. 70 லீக் ஆட்டங்கள் மும்பை, புனேவில் நடைபெறவுள்ளன. 10 அணிகளும் தலா 14 ஆட்டங்களில் விளையாடவுள்ளன. 10 அணிகளும் இரு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு அணியும் 5 அணிகளுடன் இருமுறையும் மீதமுள்ள 4 அணிகளுடன் ஒருமுறையும் விளையாடவுள்ளன. குரூப் ஏ-வில் மும்பை, கொல்கத்தா, ராஜஸ்தான், டெல்லி லக்னெள ஆகிய அணிகளும் குரூப் பி-வில் சென்னை, சன்ரைசர்ஸ், ஆர்சிபி, பஞ்சாப், குஜராத் ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன.
Trending
சிஎஸ்கே அணி - மும்பை, சன்ரைசர்ஸ், ஆர்சிபி, பஞ்சாப், குஜராத் ஆகிய அணிகளுடன் இருமுறையும் மீதமுள்ள 4 அணிகளுடன் ஒருமுறையும் லீக் சுற்றில் விளையாடவுள்ளது.
ஐபிஎல் 2022 போட்டியில் மும்பை அணி மட்டும் சொந்த மைதானத்தில் (வான்கேடே) விளையாடும் வாய்ப்பைப் பெற்றுள்ளது. இதர அணிகள் எதற்கும் இந்தச் சாதக அம்சம் இல்லை. இதுகுறித்து எழுந்த விமர்சனங்களுக்கு மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோஹித் சர்மா பதில் அளித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “இந்த வருடம் நானும் இஷான் கிஷனும் தொடக்க வீரர்களாகக் களமிறங்குவோம். சூர்யகுமார் யாதவ், பெங்களூரில் உள்ள என்சிஏ-வில் காயத்துக்குச் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். அவர் விரைவில் இங்கு வருவார். எப்போதிருந்து மும்பை அணியில் இடம்பெறுவார் என்பதை என்னால் கூற முடியாது. என்சிஏ அனுமதி கிடைத்த பிறகு அவரை உடனடியாக அழைத்து வர எல்லா ஏற்பாடுகளும் செய்யப்படும்.
எங்கள் அணி மட்டும் சொந்த மைதானத்தில் விளையாடுவதாகக் கூறுகிறார்கள். எங்கள் அணியில் ஏராளமான புதிய வீரர்கள் உள்ளார்கள். அணியில் உள்ள 70-80% பேர் இதற்கு முன்பு மும்பையில் விளையாடியதில்லை. எனவே எங்களுக்குக் கூடுதல் பலன் கிடைப்பதாகச் சொல்வதில் எனக்கு நம்பிக்கை இல்லை. அப்படியொன்று கிடையாது.
நான், சூர்யகுமார், பொலார்ட், இஷான் கிஷன், பும்ரா ஆகியோர் மட்டுமே இதற்கு முன்பு மும்பையில் விளையாடியுள்ளோம். இரு வருடங்களுக்குப் பிறகு மும்பையில் விளையாடுகிறோம். கடந்த வருடம் இதர அணிகள் மும்பையில் விளையாடின. நாங்கள் மும்பையில் ஓர் ஆட்டத்திலும் விளையாடவில்லை” என்று தெரிவித்தார்.
Win Big, Make Your Cricket Tales Now