
ஐபிஎல் 15ஆவது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில் இன்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸும் குஜராத் டைட்டன்ஸும் விளையாடின. மும்பை ப்ரபோர்ன் ஸ்டேடியத்தில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான மயன்க் அகர்வால் இந்த போட்டியிலும் சொதப்பலாக பேட்டிங் ஆடி 5 ரன்னில் ஆட்டமிழந்தார். 3ம் வரிசையில் இறங்கிய ஜானி பேர்ஸ்டோ 8 ரன்னில் ஆட்டமிழந்தார். தவானுடன் ஜோடி சேர்ந்த லியாம் லிவிங்ஸ்டோன் களத்திற்கு வந்தது முதலே அடித்து ஆடினார். 16 ரன்னில் லிவிங்ஸ்டோனின் கடினமான கேட்ச்சை ஹர்திக் பாண்டியா பிடித்தபோது பவுண்டரி லைனை மிதித்துவிட்டதால் அதற்கு சிக்ஸர் ஆனது.
அதன்பின்னர் அடித்து ஆடி 21 பந்தில் அரைசதம் அடித்தார் லிவிங்ஸ்டோன். தவான் 35 ரன்னில் ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆடிய ஜித்தேஷ் ஷர்மா 11 பந்தில் 2 சிக்ஸர்களுடன் 23 ரன்கள் அடித்து ஆட்டமிழக்க, ஒடீன் ஸ்மித் டக் அவுட்டானார். அதிரடியாக ஆடிய லிவிங்ஸ்டோன் 27 பந்தில் 64 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.