ஐபிஎல் 2022: அஸ்வின், ஜெய்ஸ்வால் அதிரடியில் ராஜஸ்தான் அசத்தல் வெற்றி!
ஐபிஎல் 2022: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
ஐபிஎல் 15ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸும் சிஎஸ்கேவும் ஆடிவருகின்றன. இந்த சீசனில் இரு அணிகளுக்குமே இதுதான் கடைசி லீக் போட்டி. மும்பை ப்ரபோர்ன் மைதானத்தில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார்.
முதலில் பேட்டிங் ஆடிவரும் சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட், டிரெண்ட் போல்ட் வீசிய முதல் ஓவரின் கடைசி பந்திலேயே வெறும் 2 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். 2ஆவது ஓவரில் வெறும் ஒரு ரன் மட்டுமே அடிக்கப்பட்டது. 3ஆம் வரிசையில் இறங்கிய மொயின் அலி, 4ஆவது ஓவரிலிருந்து அடித்து ஆட ஆரம்பித்தார்.
Trending
பிரசித் கிருஷ்ணா வீசிய 4ஆவது ஓவரில் 3 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் விளாசிய மொயின் அலி, அஷ்வின் வீசிய 5வது ஓவரில் 2 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸரையும், டிரெண்ட் போல்ட் வீசிய பவர்ப்ளேயின் கடைசி ஓவரான 6வது ஓவரில் ஒரு சிக்ஸர் மற்றும் 5 பவுண்டரிகளையும் விளாசினார். 19 பந்தில் அரைசதம் அடித்தார் மொயின் அலி.
மொயின் அலியின் அதிரடியால் 6 ஓவரில் 73 ரன்களை குவித்தது. ஆனால் 8வது ஓவரில் டெவான் கான்வே ஆட்டமிழந்தபிறகு, ஜெகதீசன் ஒரு ரன்னிலும், ராயுடு 3 ரன்னிலும் ஆட்டமிழக்க, சிஎஸ்கே அணியின் ஸ்கோர் வேகம் குறைந்தது. சிஎஸ்கே அணியின் ஆரம்ப ஸ்கோர் வேகத்தை கண்டு பதற்றமடையாமல் துணிச்சலாக கேப்டன்சி செய்து பவுலர்களை திறம்பட கையாண்டு அணியை வழிநடத்தினார் சஞ்சு சாம்சன்.
டெவான் கான்வே ஆட்டமிழந்த பின்னர் ரன் வேகம் குறைந்தது. சாஹலும் ஒபெட் மெக்காயும் இணைந்து சிஎஸ்கே அணியின் ஸ்கோரை கட்டுப்படுத்தினர். மொயின் அலி 57 பந்தில் 93 ரன்களை குவித்து கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே தொடங்கிய வேகத்திற்கு 200 ரன்களுக்கு மேல் சென்றிருக்க வேண்டும். ஆனால் ராஜஸ்தான் பவுலர்கள் அபாரமாக பந்துவீசி ஸ்கோரை கட்டுப்பத்தினர். 20 ஓவரில் 150 ரன்கள் மட்டுமே அடித்தது சிஎஸ்கே அணி.
இதையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் நட்சத்திர வீரர் ஜோஸ் பட்லர் 2 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அவரைத் தொடர்ந்து வந்த கேப்டன் சஞ்சு சாம்சன் 15, தேவ்தத் படிக்கல் 3 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
ஆனாலும் மறுமுனையில் அபாரமாக விளையாடி வந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் அரைசதம் கடந்து அணிக்கு நம்பிக்கையளித்தார். பின்னர் 59 ரன்களுடன் விளையாடி வந்த ஜெய்ஸ்வால், சோலங்கி பந்துவீச்சில் ஆட்டமிழக்க, அடுத்துவந்த ஹெட்மையரும் சொற்ப ரன்களுக்கு சொலங்கி பந்துவீச்சில் வெளியேறினார்.
அதன்பின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரவிச்சந்திரன் அஸ்வின் பவுண்டரிகளை விளாசி அணியின் வெற்றியை உறுதிசெய்தார். இதன்மூலம் 19.4 ஓவர்களில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இலக்கை எட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தியது.
இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 18 புள்ளிகளைப் பெற்று புள்ளிப்பட்டியலின் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியது.
Win Big, Make Your Cricket Tales Now