ஐபிஎல் 2022: லக்னோவுக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் ராஜஸ்தான் த்ரில் வெற்றி!
ஐபிஎல் 2022: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பெற்றது.
ஐபிஎல் 15ஆவது சீசனின் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் விளையாடின. மும்பை வான்கடேவில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரர் ஜோஸ் பட்லர் 13 ரன்னில் ஆட்டமிழந்தார். 29 பந்தில் 29 ரன்கள் அடித்து தேவ்தத் படிக்கல்லும் ஆட்டமிழந்தார். சஞ்சு சாம்சன் 13 ரன்னிலும், வாண்டர் டசன் 4 ரன்னிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின்னர் ஷிம்ரான் ஹெட்மயர் அடித்து ஆட, அவருடன் இணைந்து நன்றாக ஆடிய அஷ்வின் 23 பந்தில் 2 சிக்ஸர்களுடன் 28 ரன்கள் அடித்து ரிட்டயர்ட் ஹர்ட் ஆனார்.
Trending
சிக்ஸர்களாக விளாசி அரைசதம் அடித்த ஷிம்ரான் ஹெட்மயர் 36 பந்தில் ஒரு பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர்களுடன் 59 ரன்கள் அடித்து கடைசி வரை களத்தில் நின்று ராஜஸ்தான் அணி 165 ரன்களை அடிக்க உதவினார். 150 ரன்களை எட்டினாலே பெரிய விஷயம் என்று இருந்த ராஜஸ்தான் அணியை 165 ரன்களை எட்டவைத்தார் ஹெட்மயர்.
இதையடுத்து இலக்கை எளிதாக எட்டிவிடலாம் என களமிறங்கிய லக்னோ அணிக்கு முதல் பந்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. ட்ரெண்ட் போல்ட் வீசிய முதல் பந்தை எதிர்கொண்ட கேப்டன் கேஎல் ராகுல் க்ளீன் போல்டாகி நடையைக் கட்டினார்.
அதன்பின் இரண்டாவது பந்தில் கிருஷ்ணப்பா கவுதமும் எல்பிடபிள்யூ முறையில் விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து வந்த ஜேசன் ஹோல்டரும் 8 ரன்களில் வெளியேறி அதிர்ச்சியளித்தார்.
பின்னர் ஜோடி சேர்ந்த குயின்டன் டி காக் - தீபக் ஹூடா இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி மெல்ல மெல்ல ஸ்கோரை உயர்தியது. அதன்பின் 25 ரன்களில் ஹூடாவும், அடுத்து வந்த ஆயூஷ் பதோனி 5 ரன்னிலும் விக்கெட்டை இழந்தனர்.
அடுத்து களமிறங்கிய குர்னால் பாண்டியா அதிரடியாக விளையாடி அணிக்கு நம்பிக்கையளித்தார். ஆனால் 22 ரன்களில் குர்னால் பாண்டியா ஆட்டமிழக்க, அதே ஓவரில் டி காக் 39 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதனால் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது.
ஆனால் அடுத்து களமிறங்கிய மார்கஸ் ஸ்டோய்னிஸ் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி அணியை வெற்றிக்கு அருகில் அழைத்து வந்தார். இதனால் கடைசி ஓவரில் லக்னோ அணிக்கு 16 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது.
கடைசி ஓவரை வீசிய அறிமுக வீரர் குல்தீப் சென் அபாரமாக பந்துவீசி அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார். இதனால் லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 162 ரன்களை மட்டுமே எடுத்தது.
இதன்மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பெற்றது.
Win Big, Make Your Cricket Tales Now