மார்ச் இறுதியில் ஐபிஎல்? வெளியான தகவலால் ரசிகர்கள் மகிழ்ச்சி!
ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசன் ஏப்ரல் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது மார்ச் இறுதியில் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐபிஎல் 15ஆவது சீசனை எங்கு நடத்துவது, பார்வையாளர்களை அனுமதிக்கலாமா போன்ற விஷயங்கள் குறித்து, இன்று மொத்தம் 10 அணிகளுடன் காணொலி காட்சி மூலம் பிசிசிஐ ஆலோசனை நடத்தியது.
அப்போது ஐபிஎல் அணிகளுக்கான ஏல நடைமுறை, விதிகளை துவக்கத்திலேயே பிசிசிஐ விளக்கியது. மேலும் மெகா ஏலம் பிப்ரவரி 12 அல்லது 13-ல் நடைபெறும் என்றும் பிசிசிஐ தெளிவாக கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து, கொரோனா சூழலைப் பொறுத்து இறுதித் தேதி மாற்றப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து ஐபிஎல் 15ஆவது சீசனை எப்போது துவங்கலாம் என்ற விவாதம் நடைபெற்றுள்ளது. அப்போது மார்ச் 27ஆம் தேதி முதல் மே இறுதிவரை போட்டிகளை நடத்தலாம் என ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கரோனாவை கருத்தில்கொண்டு போட்டிகள் அனைத்தையும் மும்பையில் நடத்த பிசிசிஐ முடிவு செய்து அறிவித்திருக்கிறது. அப்போது, புனே நகரையும் சேர்க்க வேண்டும் என பல அணிகள் கோரிக்கை விடுத்ததாகக் கூறப்படுகிறது.
ஒருவேளை போட்டிகளை இந்தியாவில் நடத்த முடியவில்லை என்றால் தென் ஆப்பிரிக்கா, இலங்கை போன்ற நாடுகளில் நடத்த வேண்டாம் என்றும், ஐக்கிய அரபு அமீரகத்திலேயே போட்டிகளை நடத்த வேண்டும் எனவும் அனைத்து அணிகளும் வேண்டுகோள் விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், போட்டிகளை ரசிகர்கள் இன்றி நடத்துவது குறித்து பின் வரும் நாட்களில் முடிவு செய்துகொள்ளலாம் என பிசிசிஐ நிர்வாகிகளும், அணி உரிமையாளர்களும் ஒருமனதாக முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
Win Big, Make Your Cricket Tales Now