
ஐபிஎல் 2023 ஆம் ஆண்டுக்கான மினி ஏலம் வரும் டிசம்பர் 23ஆம் தேதி கொச்சியில் நடைபெறுகிறது.இந்த ஏலத்தில் பங்கு பெற வீரர்கள் தங்களது பெயரை பதிவு செய்யும் நாள் நவம்பர் 30ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இந்த நிலையில் மொத்தமாக 991 பேர் ஐபிஎல் மினி இடத்தில் பங்கேற்க தங்களுடைய பெயரை பதிவு செய்து இருக்கிறார்கள். இதில் மொத்தம் 185 வீரர்கள் சர்வதேச போட்டிகளில் விளையாடியவர்கள்.
மீதமுள்ள 786 பேர் சர்வதேச போட்டிகளில் பங்கு பெறாத வீரர்கள். இதில் கத்துக்குட்டி நாடுகளை சேர்ந்த 20 பேர் ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்க தங்களது பெயரை பதிவு செய்து இருக்கிறார்கள். மேலும் இந்தியாவை சேர்ந்த 19 சர்வதேச வீரர்கள் ஐபிஎல் மினி ஏலத்தில் பங்கு பெற தங்களது பெயரை கொடுத்திருக்கிறார்கள். சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய 166 வெளிநாட்டு வீரர்கள் ஐபிஎல் மினி ஏலத்தில் பங்கு பெற உள்ளனர்.
மேலும் சர்வதேச அனுபவம் இல்லாத, ஏற்கனவே ஐபிஎல் போட்டியில் விளையாடிய இந்திய வீரர்கள் 91 பேர் இந்த ஏலத்தில் பங்கு பெற தங்களது பெயரை பதிவு செய்து இருக்கிறார்கள். இதேபோன்று சர்வதேச கிரிக்கெட் அனுபவம் இல்லாமல் ஏற்கனவே ஐபிஎல் சீசன்களில் பங்கு பெற்ற மூன்று வெளிநாட்டு வீரர்களும் இந்த மினி ஏலத்தில் பங்கு பெற விருப்பம் தெரிவித்திருக்கிறார்கள். அதிகபட்சமாக சர்வதேச கிரிக்கெட் அனுபவம் இல்லாத 604 இந்திய வீரர்கள் ஐபிஎல் மினி ஏலத்தில் பங்கு பெற தங்களது பெயரை பதிவு செய்திருக்கிறார்கள்.