ஐபிஎல் 2023: பஞ்சாப்பை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெற்றது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!
பஞ்சாப் கிங்ஸிற்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
ஐபிஎல் தொடரின் 14ஆவது லீக் போட்டியில் ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் அணியும், மார்கரம் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. ஹைதரபாத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி கேப்டன் மார்க்ரம் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு தொடக்க வீரராக களமிறங்கிய பிரப்சிம்ரன் சிங் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து வெளியேறினார். அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்களில் சாம் கர்ரானை (22) தவிர மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்னை கூட தாண்டாமல் வந்த வேகத்தில் விக்கெட்டை இழந்து அடுத்தடுத்து வெளியேறினர்.
Trending
இருப்பினும் மறுமுனையில் கேப்டன் ஷிகர் தவான் ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை தனி ஆளாக விக்கெட்டை இழக்காமல் போராடி 66 பந்துகளில் 99 ரன்கள் எடுத்து கொடுத்ததன் மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் எடுத்துள்ளது. ஹைதராபாத் அணி சார்பில் அதிகபட்சமாக மயங்க் மார்கண்டே 4 விக்கெட்டுகளையும், மார்கோ ஜான்சன் மற்றும் உம்ரன் மாலிக் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கும் மயங்க் அகர்வால் - ஹாரி ப்ரூக் இணை தொடக்கம் தந்தனர். இதில் பெரிதும் எதிர்பார்த்த ஹாரி ப்ரூக் 13 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்ப, அவரைத் தொடர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த மயங்க் அகர்வாலும் 21 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
அதன்பின் ஜோடி சேர்ந்த் ராகுல் திரிபாதி - கேப்டன் ஐடன் மார்கம் இணை மேற்கொண்டு விக்கெட்டுகளை இழக்காமல் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். ஒரு கட்டத்திற்கு மேல் அதிரடி காட்ட தொடங்கிய ராகுல் திரிபாதி எதிரணி பந்துவீச்சை பவுண்டரியும், சிக்சர்களுமாக பறக்கவிட்டு அசத்தினார்.
தொடர்ந்து அதிரடியாக விளையாடிய திரிபாதி 35 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அவருடன் இணைந்து அதிரடி காட்ட தொடங்கிய மார்க்ரமும் பவுண்டரிகளை விளாச ஹைதராபாத் அணியின் வெற்றியும் உறுதியானது. இறுதியில் 17.1 ஓவர்களில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இலக்கை எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி நடப்பு சீசனில் முதல் வெற்றியைப் பதிவுசெய்தது.
இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ராகுல் திரிபாதி 10 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 74 ரன்களையும், ஐடர்ன் மார்க்ரம் 6 பவுண்டரிகளுடன் 37 ரன்களையும் சேர்த்து அணியின் வெற்றிக்கு உதவினர்.
Win Big, Make Your Cricket Tales Now